சென்னை : தமிழகத்தில் முதல் முறையாக நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 50,000 ரூபாயை எட்டியது; மேலும் விலை அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் தங்க நகை பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. அவசர தேவைக்கு பணமில்லை என்றால், தங்கத்தை மட்டுமே விற்று அல்லது அடகு வைத்து உடனடியாக பணமாக மாற்ற முடியும் என்பதால், அனைத்து தரப்பு மக்களும், தங்கத்தை ஒரு சேமிப்பாகவும், முதலீடாகவும் கருதுகின்றனர். இரு ஆண்டுகளாக ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவும் போரால், உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்தனர். இதன் காரணமாக, தங்கம் விலை வேகமாக அதிகரிக்கத் துவங்கியது. வாய்ப்பில்லை
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 6,215 ரூபாய்க்கும்; சவரன் 49,720 ரூபாய்க்கும் விற்றது. ஒரு கிராம் வெள்ளி, 80.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 280 ரூபாய் அதிகரித்து, 50,000 ரூபாயை எட்டியது.இதுவரை தங்கம் விலை இவ்வளவு உயர்ந்தது இல்லை. எனினும், இதனால் விலை குறைய வாய்ப்பில்லை என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.வெள்ளி நேற்று கிராமுக்கு 30 காசு உயர்ந்து, 80.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் மத்திய வங்கியான 'பெடரல்' வங்கி, வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாததுடன், வரும் காலங்களில் வட்டியை குறைக்கவும் தீர்மானித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் வைப்பு நிதியில் முதலீடு செய்வதை தவிர்த்து, பெருமளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.ரஷ்யா - உக்ரைன் போர், உலக பொருளாதாரத்திற்கே சவாலாக கருதப்படுகிறது. பொருளாதாரம் பாதிக்கப்படும் போது, பங்கு சந்தைகள் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும். புதிய உச்சம்
எனவே, முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது; அதன் தாக்கம் உள்நாட்டிலும் எதிரொலிக்கிறது. இன்னும் இரு வாரங்களுக்கு, தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும். வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரிக்கும்.இவ்வாறு சலானி கூறினார்.தமிழகத்தில் 2019 செப்., 4ல், 1 சவரன் தங்கம் விலை 30,000 ரூபாயை தாண்டியது; 2020 ஜூலை 27ல், சவரன் விலை 40,000 ரூபாயை எட்டியது.
இதற்கு முன் உச்சம்