உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி அடையாளமுள்ள தெருக்களின் பெயரை மாற்றம் செய்ய பொது மக்களுக்கு அதிகாரம்

ஜாதி அடையாளமுள்ள தெருக்களின் பெயரை மாற்றம் செய்ய பொது மக்களுக்கு அதிகாரம்

சென்னை : ''ஜாதி அடையாளத்துடன் கூடிய தெருக்களின் பெயர்களை மாற்றுவது குறித்து, பொதுமக்களே முடிவு செய்யலாம்,'' என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:

கிராமப்புற மக்கள், தங்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவும், தேவைகளை கேட்டு பெறவும், ஒவ்வொரு ஆண்டும், ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள, 12,525 ஊராட்சிகளில், 10,000 ஊராட்சிகளில் நடக்கும், கிராம சபை கூட்டங்களில், முதல் முறையாக, 'டான் பி நெட்' இணையசேவை வாயிலாக, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பேச உள்ளார். கூட்டத்தில், 16 பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்படும். அதில், குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, குப்பை சேகரிப்பு உட்பட பல்வேறு முதன்மை கோரிக்கைகளில், மூன்று தேவைகளை அந்த மக்களே முடிவு செய்வர். அதன்மீது, 'நம்ம ஊரு, நம்ம அரசு' என்ற திட்டத்தின்கீழ், உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இழிவுபடுத்தும் பொருள் தரும், ஜாதி பெயர் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலை போன்ற பொது உள்கட்டமைப்புகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, இன்று நடக் கும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு உட்பட பல்வேறு பெயர்களுக்கு பதிலாக, பூக்கள் பெயர் உட்பட பொதுப்பெயர்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்றொரு அரசாணையில், ஜாதியை அடிப்படையாக கொண்ட பெயர், ஒரு இடத்திற்கு இருந்து அதை மாற்ற வேண்டாம் என, கிராம மக்கள் தெரிவித்தால், அந்த பெயர் மாற்றப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பெயர் மாற்றம் வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தமிழக அரசின் ஒப்புதலுடன், பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். பாரபட்சமின்றி, இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, மக்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்கிறது. மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நுாறு நாள் வேலை திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர்கூறினார்.

மாத இறுதியில் வார்டு சபை கூட்டம்

''கிராம சபை கூட்டம், இன்று நடக்க உள்ள நிலையில், இம்மாத இறுதியில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள, 12,838 வார்டுகளில், 'வார்டு சபை' கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ