சென்னை: நாளை (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், நாளை 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடம் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (மே 7) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மே 9ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். நாளை முதல் மே 11 வரையிலான அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.