அன்னுார்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி நூற்றுக்கணக்கானோர் மனு அளித்தனர். தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல் முகாம், அன்னூர் தாலுகாவில், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் நேற்று நடந்தது.முகாமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வன் வந்த் வாஹே துவக்கி வைத்தார். கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். அத்திக்கடவு போராட்ட குழு விவசாயிகள் பேசுகையில், 'அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில், ஏழு குளங்கள் அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குளத்துக்கு மட்டும் சிறிது அத்திக்கடவு நீர் வந்துள்ளது. மற்ற ஆறு குளங்களுக்கும் திட்டம் துவங்கி ஓராண்டாகியும் தண்ணீர் வரவில்லை. திட்டம் நிறைவேறியும் எங்கள் ஊராட்சிக்கு பயன்படாத நிலை உள்ளது' என்றனர்.கூடுதல் கலெக்டர், இது குறித்த போட்டோ மற்றும் வீடியோக்களை பார்த்தார். பின்னர் விவசாயிகளிடம், 'இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள்' என்றார். கிராம மக்கள் கூறுகையில்,' 6 பி அரசு டவுன் பஸ் லக்கேபாளையம் வரை மட்டும் இயங்குகிறது. அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள அக்கரை செங்கப்பள்ளி வரை இயக்க வேண்டும்.   அரசு டவுன் பஸ் ஏ.ஆர். 1 சுமைதாங்கி வரை இயங்கி வருகிறது. அங்கிருந்து 2.5 கி.மீ., தொலைவில் உள்ள அக்கரை செங்கப்பள்ளி வரை இயக்க வேண்டும்.  சமுதாய நலக் கூடங்கள் அமைக்க வேண்டும்,' என்றனர்.பலர், 'பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல்,  நில அளவை செய்தல் ஆகிய கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். இந்த முகாம் கண் துடைப்பாக உள்ளது,' என வேதனையுடன் தெரிவித்தனர்.விண்ணப்பங்கள் எழுத போதுமான தன்னார்வலர்கள் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.  முகாமில் விண்ணப்பங்களை பெற்று, பதிவேற்றம் செய்யும் சர்வர் மிக மெதுவாக இயங்கியதால் இரண்டு மணி நேரம் காத்திருந்த பின்னரே விண்ணப்பத்திற்கு பதிவு எண் பெற்றனர். மின்தடை ஏற்பட்டது. ஜெனரேட்டர் வசதி இல்லாததால், சிறிது நேரம் முகாம் முடங்கியது. காரனூர் மக்கள் கூறுகையில், 'இங்கு அனைத்து துறை அதிகாரிகளும் வந்து மனுக்களை ஆய்வு செய்து தீர்வு தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வந்தோம். ஆனால் இங்கு மனுக்களை பெற்றுக் கொண்டு ஒப்புகை சீட்டு மட்டுமே தந்துள்ளனர்,' என்றனர். இலவச மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உள்பட பல பங்கேற்றனர். 
மகளிர் திட்டத்துக்கு மவுசு
கூட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். வந்தவர்களில், பெரும்பாலான பெண்கள், மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தனர். 'மகளிர் உரிமைத்தொகைக்காக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை' என, பெண்கள் பலர் தாசில்தார் யமுனாவிடம் புகார் தெரிவித்தனர். இதேபோல், இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு, பட்டா மாறுதல், நில அளவை செய்தல், ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுக்கள் அளித்தனர்.