உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் முத்தரப்பு பேச்சில் உடன்பாடு இல்லை

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் முத்தரப்பு பேச்சில் உடன்பாடு இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து நடந்த முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்ட பேச்சு, 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 15வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகள் குறித்த முத்தரப்பு பேச்சு, சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல தனி ஆணையர் ரமேஷ் தலைமையில் நேற்று நடந்தது. சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன், சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலர் ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம், அ.தொ.பே., பொதுச்செயலர் கமலகண்ணன் உட்பட, 27 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, அடுத்தகட்ட பேச்சு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: எட்டு ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கு நிலுவை வைத்துள்ள அகவிலைப்படி, மற்றவர்களுக்கு தர வேண்டிய நிலுவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு, 14 மாதங்களாக அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வலியுறுத்தினோம். இதை, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுக்கு, அரசு தரப்பில் 14 பேர் குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்தக் குழு, விரைவில் பேச்சுக்கான தேதியை அறிவித்து துவங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், மாதம் 3,000 ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி மறுப்பால் மோதல்

போக்குவரத்து ஊழியர்கள் குறித்த முத்தரப்பு பேச்சில் பங்கேற்க அனுமதிக்கும்படி, ஓய்வூதியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனுமதி கோரினர். ஆனால், வேலை நிறுத்த நோட்டீஸ் அறிவித்த சங்கங்களுடன் மட்டுமே பேச்சு நடப்பதாக கூறி, அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் ராகவேந்திரன், மருதமுத்து, அப்துல் அஜீஸ், கதிரேசன், அனந்த ராமகிருஷ்ணன் உட்பட பலரும், கூட்ட அரங்கின் வெளியே கோஷம் எழுப்பினர்.சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் வெளியே வந்த போது, ஓய்வூதியர் நல அமைப்பு திருச்சி பேரவை மாநில துணைத் தலைவர் ராகவேந்திரன், 75, அவரை தள்ளியதாகக் கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து, சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் சிலர், ராகவேந்திரனை தாக்கினர். இதனால் நிலை குலைந்து போன ராகவேந்திரனை போலீசார் மீட்டு, தொழிலாளர் ஆணையரக அலுவலகத்திற்குள் தனியாக அமர்த்தி வைத்தனர். சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் சென்ற பின்னர் ராகவேந்திரனை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி