இன்னும் ஒரு நாள் இருக்கிறது மீண்டும் பேசிப் பாருங்களேன்! தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுரை
புதுடில்லி:துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, கவர்னர் மீது, தமிழக அரசு தரப்பில் சரமாரியாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, இன்னும் ஒரு நாள் இருக்கிறது. கவர்னரும், அரசு தரப்பும் அமர்ந்து பேசி, சமரசத்துக்கு வாருங்கள்' என, அறிவுறுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். 'தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்' என, கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.துணைவேந்தர்கள் நியமனம் விவகாரத்தில் பல்கலை மானியக் குழு எதிர் மனுதாரராக சேர்க்கப்படாததால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பில் எந்த வாதங்களையும் முன்வைக்க முடியாது என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், 'இந்த விஷயத்தில் மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். அரசும் சிரமப்படுகிறது' என, கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, அபிஷேக் மனு சிங்வி, வில்சன் உள்ளிட்டோர் வாதங்களை முன்வைத்தனர். அவர்களிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இரு தரப்புக்கும் நடந்த வாதங்கள் பின்வருமாறு: தமிழக அரசு வழக்கறிஞர்கள்: துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர், மாநில அரசை பழிவாங்குகிறார். அவரது செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஒரு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால், அதை ஆண்டுக் கணக்கில் நிலுவையில் வைத்துள்ளார். நீதிபதிகள்: கவர்னர், எத்தனை மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார்? எத்தனை மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்? வழக்கறிஞர்கள்: கடந்த 2020 முதல் 2023 வரை, 12 மசோதாக்களை அனுப்பினோம். ஜனாதிபதிக்கு இரண்டை அனுப்பி விட்டு, 10 மசோதாக்களை அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார். பின், அவற்றை நாங்கள் மீண்டும் கவர்னருக்கே அனுப்பினால், அவற்றையும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார். மாநில அரசு, மசோதாவை இரண்டாவது முறையாக திருத்தியோ அல்லது அப்படியே அனுப்பினால், அதற்கு கவர்னர் நிச்சயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அதைத்தான் தமிழக கவர்னர் மீறி உள்ளார். அதனால்தான் அவரது செயல்பாடுகளை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.அமைச்சர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும் கூட, கவர்னர், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கிறார். இதெல்லாம் அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசையும் அவமரியாதை செய்யும் விஷயம்.நீதிபதிகள்: மசோதாக்களை, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்து விட்டார் என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்?வழக்கறிஞர்கள்: அரசியல் சாசனப் பிரிவு 200, 201ன்படி கவர்னரை அவ்வாறு செய்ய விடாமல் நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுக்கலாம். நீதிபதிகள்: மசோதாக்கள் குறித்து கவர்னரே முடிவெடுக்காமல், எதற்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்?வழக்கறிஞர்கள்: அவர் நினைத்தால் ஜனாதிபதிக்கு அனுப்பலாம். ஆனால், ஏன் நினைக்கிறார் என்பதில் தான் அவரது உள்நோக்கம் உள்ளது.நீதிபதிகள்: இரண்டாவது முறையாக கவர்னரால் மசோதாவை திருப்பி அனுப்ப முடியுமா?வழக்கறிஞர்கள்: முடியவே முடியாது. ஒரு உரையில் இரு கத்திகள் இருக்க முடியாது. ஒரு மாநிலத்திற்கு ஒரு முதல்வர்தான் இருக்க முடியும். அதைத்தான் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. கவர்னர், சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது. ஆனால், தமிழக கவர்னர் அப்படித்தான் செயல்படுகிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் கவர்னர்கள் இப்படித்தான் செயல்படுகின்றனர். தமிழகத்தில், மசோதாக்களை ஆண்டுக்கணக்கில் கவர்னர் நிலுவையில் வைத்துள்ளார். அதன் வாயிலாக தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்குகிறார். மசோதாவை நிறைவேற்றட்டும்; நிராகரிக்கட்டும் அல்லது திருப்பி அனுப்பட்டும். ஆனால் நிலுவையில் வைத்து வஞ்சிக்கக் கூடாது.நீதிபதிகள்: கவர்னர், மசோதாவை அரசுக்கும் அனுப்பாமல், ஜனாதிபதிக்கும் அனுப்பாமல், ஒப்புதலும் அளிக்காமல் வைத்திருக்க முடியுமா? வழக்கறிஞர்கள்: கவர்னர், முதல் தடவையே ஜனாதிபதிக்கு அனுப்பலாம் அல்லது அரசுக்கு திருப்பி அனுப்பலாம். அரசுக்கு அனுப்பிவிட்டு, அதை மீண்டும் கவர்னருக்கு அரசு அனுப்பினால் அவர் அதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். அவருக்கு அதற்குப் பின், மூன்றாவது வாய்ப்பென்று எதுவும் இல்லை. ஆனால், அப்படி ஒரு மூன்றாவது வாய்ப்பை அரசியல் சாசனத்திற்கு எதிராக தன்னிச்சையாக கவர்னர் உருவாக்கி உள்ளார்.முதல் முறை மசோதாவை கவர்னருக்கு அரசு அனுப்பி வைக்கிறது என்றால், அப்போதுதான் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும். கவர்னர், முதல் முறை மசோதாவை அரசுக்கு அனுப்பி வைத்தபின், அரசு அதை இரண்டாவது முறையாக கவர்னர் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கிறது என்றால், அதை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைக்க முடியாது. இதை உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உறுதியாக தெரிவித்து உள்ளன. எதுவாக இருந்தாலும் அரசு அனுப்பும் மசோதாக்களை எந்த முடிவும் எடுக்காமல், கவர்னர் தன் கையிலேயே வைத்திருக்க எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை. பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தும்கூட, கவர்னர், அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார். இதன்பின், மீண்டும் நீதிமன்றம் தன் அதிருப்தியை வெளிப்படுத்திய பிறகு தான், அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த அளவிற்கு தமிழக கவர்னர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். கவர்னரின் தாமதமான செயல்பாடுகளால், 10 பல்கலைகள் துணைவேந்தர்கள் இல்லாமல் சிரமப்படுகின்றன.அமைச்சரவையின் அறிவுரையின்படியே கவர்னர் செயல்பட வேண்டும் என்று தான் அரசியல் சாசனம் கூறுகிறது; தன்னிச்சையாக செயல்பட அவருக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே நடந்த இதே மாதிரியான வழக்கு விசாரணையின்போது, தமிழக முதல்வர் மற்றும் கவர்னர் அமர்ந்து பேசி சமரசமான முடிவுக்கு வாருங்கள் என, இதே உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியிருந்தது. அதேபோல தமிழக முதல்வரும் செய்திருந்தார். ஆனாலும், தமிழக கவர்னர் தொடர்ந்து முரண்டு பிடித்து, மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். மாநில அரசுகள், கவர்னர்களால் இப்படி தவறான முறையில் கையாளப்படக் கூடாது என்பதற்காக தான், நாங்கள் இப்படி உங்கள் முன்பாக நின்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.இவ்வாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.இதைத் தொடர்ந்து, நேற்றைய அலுவல் நேரம் முடிந்தும் அரைமணி நேரம் கூடுதலாக விசாரித்து, பிறகு வழக்கு விசாரணையை நாளைய தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 'அன்றைய தினம், முதல் வழக்காக இந்த விவகாரம் விசாரிக்கப்படும். 'தமிழக அரசு தரப்பில் வாதங்கள் நிறைவடைந்தபின், கவர்னர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க வேண்டும்' என்றனர். இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'தமிழக அரசும், கவர்னரும் மீண்டும் ஒரு கோப்பை காபியுடன் அமர்ந்து, இந்த விஷயத்தை எப்படி சுமூகமாக முடிக்க முடியும் என யோசியுங்கள். 'நாங்கள் அடுத்ததாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு முன்பாக, உங்களுக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக அவகாசம் இருக்கிறது' என்றனர்.