| ADDED : ஜன 17, 2025 02:21 PM
நெல்லை: முண்டந்துறை புலிகள் காப்பகத்திட்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை வைத்திருப்போர் , அதனைவெளியேற்ற வேண்டும் என்ற தமிழக வனத்துறையினரின் உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்திட்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு, தமிழக வனத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. அந்த நோட்டீஸில், 'களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ளே கால்நடைகள் நுழைவது, மேய்ப்பது, வளர்ப்பது வன உயிர்பாதுகாப்பு சட்டத்தின் குற்றச்செயலாகும். கால்நடைகளை வைத்திருப்போர் வரும் 20ம் தேதிக்கள் அதனை வெளியேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் கால்நடைகள் வைத்திருப்போர் மீது வனக்குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கால்நடைகள் கைப்பற்றப்படும்,' எனக் குறிப்பிட்டிருந்தனர். வனத்துறையினரின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வனத்துறையினரின் அறிவிப்பு, வன உரிமைச் சட்டம் 2006 வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமையை மறுப்பதாக உள்ளது. புலிகள் சரணாலயத்திற்கும் வன உரிமைச் சட்டம் பொருந்தும். வனத்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.எனவே இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அறிவிப்பை திரும்பப்பெறவும், மக்களின் சட்ட உரிமையைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்', இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.