சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:சில்மிஷ ஆசிரியர் சிக்கினார்
கடலுார் மாவட்டம், வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயராஜ். இவர், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவியர், பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். கடலுார் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்படி, ஜெயராஜ் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, குழந்தைகள் நலக்குழு தாமாக முன் வந்து நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போக்சோவில் ஜெயராஜ் நேற்று கைது செய்யப்பட்டார்.வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
துாத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துாரை சேர்ந்த மாயகிருஷ்ணன், 25, என்பவர், 2020ல் அதே பகுதியை சேர்ந்த, 17 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர். துாத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி முருகன், மாயகிருஷ்ணனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 1 லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.படை வீரருக்கு '5 ஆண்டு'
ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனஞ்செயன், 26; மத்திய பாதுகாப்பு படை வீரர். இவர், 2019 நவம்பரில் கேரளாவின் கண்ணனுாரில் இருந்து ஜார்கண்ட்டின் ஜாம்ஷெட்பூருக்கு ரயிலில் புறப்பட்டார். ரயிலில் இருந்த கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு தனஞ்செயன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். சிறுமி குடும்பத்தினர் புகாரின்படி, திருப்பூர் ரயில்வே போலீசார் தனஞ்செயனை போக்சோவில் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி கோகிலா, தனஞ்செயனுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.