மதுவை கொண்டு வந்தவர்கள் தானே மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும்!
சென்னை:'எந்த அதிகாரத்தை பயன்படுத்தி, மதுவை கொண்டு வந்ததோ, அதே அதிகாரத்தை பயன்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்துவது தானே முறை' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே சமயம், எந்த ஆட்சியால் மது கொண்டு வரப்பட்டதோ, மது ஆலை அதிபர்கள் எந்த கட்சியில் அதிகமாக உள்ளனரோ, அவர்களை வைத்து மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வருத்தமளிக்கும் செயல். மேலும், மதுவை ஒழிக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவது, மக்களை ஏமாற்றும் செயல். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, மது என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தது தி.மு.க., ஆட்சி. எந்த அதிகாரத்தை பயன்படுத்தி மதுவைக் கொண்டு வந்ததோ, அதே அதிகாரத்தை பயன்படுத்தி, மதுவிலக்கை அமல்படுத்துவது தானே முறை.கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர குரல் கொடுக்கும் தி.மு.க., தலைமை, மாநிலப் பட்டியலில் உள்ள மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது புரியாத புதிராக இருக்கிறது. மாநில உரிமை அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த தயங்குவது ஏன்? டாஸ்மாக் வருமானம் தமிழக அரசுக்கு செல்கிற நிலையில், இதற்கு ஏன் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். ஒருவேளை, மது ஆலை அதிபர்கள் எல்லாம் தி.மு.க.,வில் இருக்கிறார்கள் என்பதால், மதுவிலக்கை கொண்டு வர, தி.மு.க., தயங்குகிறதோ?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.