| ADDED : ஆக 05, 2011 06:05 PM
சின்னமனூர் : குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்து பிரசித்தி பெற்றதாக, தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. ஆடித்திருவிழா ஜூலை 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.இன்று சனீஸ்வரர்- நீலா தேவி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. காலையில் முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு மணக்கோலத்தில் இருந்த சனீஸ்வரருக்கும், நீலா தேவிக்கும் திருமண வைபவம் நடந்தது. கோயில் தலைமை பூசாரி திருமலை ஜெயபால் முத்து மங்கள நாணை சனீஸ்வரரிடம் வழங்கி, அம்மன் கழுத்தில் கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பெண்களுக்கு மாங்கல்ய நாண், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட மாங்கல்ய பாக்கியம் தர சனீஸ்வரரை வேண்டி, பெண்கள் தங்கள் மாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொண்டனர். விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.நாளை பெருந் திருவிழாவான மூன்றாவது சனிவார விழா நடக்கிறது.ஜூலை 13 ல் நான்காவது சனி வாரம், 15 ல் சோணை கருப்பசாமி பொங்கல் விழாவும், 20 ல் ஐந்தாவது சனிவார விழாவும் நடக்கிறது. 21 ல் ஊர் பொங்கல் விழாவுடன் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.