உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பட்டியலே மூச்சு முட்டுகிறது: கருணாநிதி

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பட்டியலே மூச்சு முட்டுகிறது: கருணாநிதி

சென்னை: 'தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு நிகழ்வுகளின் பட்டியலே மூச்சு முட்டுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கை: 'தி.மு.க., ஆட்சியில், காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. சட்டம் - ஒழுங்கு இல்லை. கொலையும், கொள்ளையும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. பெண்கள், சாலையில் நடமாட முடியவில்லை. ஆட்சியினரால் இந்த கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை' என்றெல்லாம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜெயலலிதா பேசியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தமது ஆட்சிப் பொறுப்பேற்றதும், 'வழிப்பறி கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டனர்' என, ஜெயலலிதா கூறினார். அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்று இன்னும் மூன்று மாதங்கள்கூட முடியவில்லை. அதற்குள், இளம்பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு, வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை, கொலை, தற்கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கோஷ்டி மோதல், கஞ்சா பறிமுதல், தி.மு.க., பிரமுகர்கள் படுகொலை, வாகன கடத்தல், அ.தி.மு.க., பிரமுகர் போலீசுடன் மோதல், விசாரணை கைதி மர்ம சாவு, கைதி தப்பியோட்டம், குழந்தை கடத்தல், மாணவி கடத்தல், பட்டதாரி பெண் எரித்து கொலை, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி, வெளிமாநிலங்களிலிருந்து மதுபானம் கடத்தல், போலீஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு என, கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு நிகழ்வுகள் பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகளை பட்டியலிடவே மூச்சு முட்டுகிறது. தி.மு.க., ஆட்சியை குறை கூறி அன்றாடம் அறிக்கை விட்ட ஜெயலலிதா, தமது ஆட்சியில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? போலீசை கேட்டால், 'அ.தி.மு.க., ஆட்சியினர் அறிவுரைப்படி, தி.மு.க., வினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதற்கே நேரம் போதவில்லை' என்பர். பொய் வழக்கு போடும் ஜெயலலிதா, இந்த உண்மை சம்பவங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை