குரூப் 2, 2A தேர்வு முறையில் திடீர் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு
சென்னை: கணினி வழியில் இல்லாமல், ஓ.எம்.ஆர்., முறையில் குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2540 குரூப் 2 மற்றும் குரூப் 2A பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்.14ம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் டிசம்பர் 12ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். 2 தாள்கள் கொண்ட தேர்வில், 2ம் தாள் தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில், குரூப் 2, 2A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வு ஓ.எம்.ஆர்(OMR - Optical mark recognition) எனப்படும் ஒளிக்குறி உணரி முறையில் நடத்தப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி,, அறிவித்து இருக்கிறது. மேலும் குரூப் 2, 2A பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்துக்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான- IV தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு தேர்வாணைய இணையதள பக்கத்தில் http://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html வெளியிடப்பட்டு உள்ளது.முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II பதவியின் நேரடி நியமனத்துக்கான கணினிவழித் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.