உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆசிரியைகளிடம் இரவில் ஓ.டி.பி., கேட்டு டார்ச்சர்; எஸ்.ஐ.ஆர்., பணிகளால் அதிருப்தி

 ஆசிரியைகளிடம் இரவில் ஓ.டி.பி., கேட்டு டார்ச்சர்; எஸ்.ஐ.ஆர்., பணிகளால் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணிகள் தொடர்பாக ஆசிரியைகளின் அலைபேசிகளில் நள்ளிரவிலும் அலுவலர்கள் தொடர்பு கொண்டு 'ஓ.டி.பி.,' (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்டு 'டார்ச்சர்' செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் பல்வேறு குழப்பங்களுடன் நடக்கிறது. ஆறரை கோடிக்கும் மேல் வாக்காளர்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு அதற்கேற்ப ஆட்கள் நியமிக்கவில்லை. தற்போது பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பயிற்சியும் அளிக்கவில்லை என தேர்தல் கமிஷனின் அவசர நடவடிக்கைகளை கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ஒரு பி.எல்.ஓ.,விற்கு ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் வரை வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை நிரப்பும் போது வாக்காளர்கள் கேட்கும் பல சந்தேகங்களுக்கு பி.எல்.ஓ.,க்களுக்கே பதில் அளிக்கத் தெரியவில்லை. இதற்கிடையே எஸ்.ஐ.ஆர்., பணி மந்தமாக நடக்கும் மதுரை, திருப்பூர் உட்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி ஒதுக்கி கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்கு பி.எல்.ஓ.,க்கள் நிரப்பிய விண்ணப்பங்களை எஸ்.ஐ.ஆர்., செயலியில் பதிவேற்றம் செய்வதும், வாக்காளர்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, நிரப்பியவற்றை பெற்று மண்டல தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளன. மண்டல தேர்தல் அலுவலகங்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், நள்ளிரவு வரை எஸ்.ஐ.ஆர்., செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பி.எல்.ஓ.,க்களான பெண் ஆசிரியர்களின் அலைபேசிகளுக்கு செல்லும் ஓ.டி.பி.,யை கேட்க அலுவலர்கள் நள்ளிரவிலும் அலைபேசியில் அழைப்பதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு குடும்பத்தில் நெருக்கடியும் ஏற்படுவதாக புலம்புகின்றனர். இதுகுறித்து ஆசிரியைகள் கூறியதாவது: தேர்தல் கமிஷன் கொடுத்துள்ள விண்ணப்பங்கள் அடிப்படையில் தினம் 100 பேரை சந்தித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் பள்ளிகளில் பாடம் நடத்திவிட்டு இப்பணியை செய்வதால் குறைந்தது 5 பேரை கூட சந்திக்க முடியவில்லை. இதுதொடர்பாக எவ்வித பயிற்சியும் அளிக்கவில்லை. நினைத்தால் பயிற்சி முகாம் என வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்புகின்றனர். எங்கிருந்தாலும் அவசரகதியில் ஓட வேண்டியுள்ளது. இரவில் ஓ.டி.பி., கேட்பதால் பெண் அலுவலர்களுக்கு கடும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. கேரளாவில் எஸ்.ஐ.ஆர்., பணி அழுத்தம் காரணமாக பி.எல்.ஓ., ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நிலை தான் தமிழகத்திலுள்ள பெரும்பாலான பி.எல்.ஓ.,க்களுக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ