போக்குவரத்து பாதிப்பு அறிக்கை கட்டாயம் கட்டட அனுமதிக்கு அதிகரிக்கும் தொந்தரவு
சென்னை:அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட அனுமதி பெறுவதற்கு, அதனால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு குறித்த அறிக்கை அளிப்பது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பொது கட்டட விதிகள் அடிப்படையில், கட்டுமான திட்டங்களுக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்குகின்றன. இவ்வாறு கட்டட அனுமதி வழங்கும் போது, அதில் போதிய எண்ணிக்கையில், வாகன நிறுத்துமிடங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும். இந்த விபரங்களை, கட்டட அனுமதி வரைபடத்தில் காட்ட வேண்டும். அத்துடன், அந்த கட்டடத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என, போக்கு வரத்து காவல் துறையிடம், தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இந்த நடைமுறை, சென்னை பெருநகர் பகுதியில் அமலில் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காவல் துறையிடம், போக்குவரத்துக்கான தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதில்லை. அதிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக வளாகங்கள், மால்கள் போன்றவை கட்டப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுதும், நான்கு மாடிக்கு மேல் கட்டடம் கட்டுவதாக இருந்தால், போக்குவரத்து காவல்துறையின் தடையின்மை சான்றிதழ் அவசியம் என்ற நடைமுறையை அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மற்றும் தமிழகம் முழுதும், நகர்ப்புற பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும்போது, அதனால், அப்பகுதியில், ஏற்படும் போக்குவரத்து பாதிப்புகளை ஆராய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, கட்டுமான திட்ட அனுமதி வழங்கும்போது, ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதனால், பெரிய கட்டுமான திட்டங்கள் வரும் இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, கட்டுமான நிலையிலேயே, நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.