உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் சோகம்

 சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் சோகம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில், சிறுவன் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ராயல் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 50. இவர் விவசாய கருவிகள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கிரிதரன், 20, திருச்சி அடுத்த சமயபுரத்தில் உள்ள வேளாண் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இளைய மகன் கிஷோர், 16. விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் வடக்கு பெரியார் நகரில் புதிய வீடு கட்டி முடித்து, நேற்று புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன் காரணமாக, புதிய வீட்டின் முன்புறம் கொட்டி இருந்த மண்ணை, நேற்று முன்தினம் மாலை 7:00 மணியளவில் கிஷோர் சமன் செய்துள்ளார். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். விருத்தாசலம் போலீசார், உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுமனை புகுவிழா நடக்க இருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்டுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்