ரயில் டிரைவர்கள் 36 மணி நேரம் உண்ணாவிரதம்
ஈரோடு:ரயில் டிரைவர்களின் குறைகளை தீர்ப்பதில், ரயில்வே அமைச்சகத்தின் மனப்பான்மையை கண்டித்து, நாடு முழுதும் ரயில் டிரைவர்கள், நேற்று காலை 8:00 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். இன்று இரவு 8:00 மணி வரை, 36 மணி நேரம் போராட்டம் அறிவித்துள்ளனர்.ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த போராட்டத்துக்கு, அனைத்து இந்திய லோகோ ஓட்டுநர் கழக சேலம் கோட்ட பொருளாளர் சீனிவாச பட், தலைமை வகித்தார். தென்மண்டல துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.வேலை நேரத்தை, 10 மணி நேரமாக குறைக்க வேண்டும். தொடர் இரவுப் பணியை இரண்டாக குறைக்க வேண்டும்; 36 மணி நேரத்துக்குள் வீடு திரும்ப வழி செய்ய வேண்டும்; 30 மணி நேர வார ஓய்வுடன் வழக்கமான, 16 மணி நேர ஓய்வை எடுக்க அனுமதிக்க வேண்டும்.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. தென்னக ரயில்வே அளவில் திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, திருச்சி, ஈரோட்டில் போராட்டம் நடக்கிறது. அதேசமயம், சேலம் ரயில்வே கோட்டத்தில் ஈரோட்டில் மட்டும் உண்ணாவிரதம் நடக்கிறது.