உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: ஆரம்ப கட்ட விசாரணை துவக்கம்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: ஆரம்ப கட்ட விசாரணை துவக்கம்

சென்னை:'தமிழகத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடர்பான புகார் குறித்து, ஆரம்பகட்ட விசாரணை துவக்கப்பட்டு உள்ளது' என, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 2021 - 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45,800 மின்மாற்றிகள் கொள்முதலுக்கு, 1,183 கோடி ரூபாய் மதிப்புக்கு 'டெண்டர்' கோரப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்களை லாபமடையச் செய்ததன் வாயிலாக, அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக, பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்த அ.தி.மு.க., நிர்வாகி சரவணன் தரப்பில், வழக்கறிஞர் வேதவிகாஸ் ஆஜராகி தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, அறப்போர் இயக்கம் அளித்த புகார் அடிப்படையில், அரசின் அனுமதி பெற்று, ஆரம்பகட்ட விசாரணை துவக்கப்பட்டு உள்ளது,'' என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும், நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் பட்டியலிடும் வகையில், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனு உள்ளிட்ட வழக்குகளை, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை