தலா ரூ.20 லட்சம் வழங்கவில்லை போக்குவரத்து ஓய்வூதியர்கள் வேதனை
சென்னை : சர்வதேச ஓட்டுனர் தினம் கொண்டாடும் அரசு, போக்குவரத்து ஓய்வூதியர்கள், 8,500 பேருக்கு ஓய்வு கால பலன்களை வழங்காமல் உள்ளது என, போக்குவரத்து ஓய்வூதியர்கள் வேதனை தெரிவித்தனர்.தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில், 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்றவற்றை, இன்னும் வழங்கவில்லை. ரூ.20 லட்சம்
அந்த வகையில் தமிழகம் முழுதும் 8,500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், ஓய்வு கால பலன்களை பெறாமல் உள்ளனர்.சர்வதேச ஓட்டுனர் தினத்தை, நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில், பணியாற்றிய ஓட்டுனர் உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு, இன்னும் ஓய்வு கால பலன்களை அரசு வழங்கவில்லை என, ஓய்வூதியர்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து, போக்குவரத்து ஓய்வூதியர்கள் சிலர் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களில், 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற, 8,500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு, இன்னும் முழுமையான ஓய்வு கால பலன்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஓய்வூதியருக்கும், சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். நடவடிக்கை
ஆனால், ஓய்வு பெறும் ஊழியர்கள், வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். ஓய்வு கால பலன்களை பெறாமல் இதுவரை 200 பேர் இறந்துள்ளனர். அதுபோல, 2015 நவம்பர் முதல் தற்போது வரை, அகவிலைப்படி உயர்வு இல்லாமல், குறைவான ஓய்வூதியம் பெற்று, வறுமையில் வாழ்ந்து வருகிறோம். சர்வதேச ஓட்டுனர் தினத்தை யொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்திய நிலையில், எங்களுக்கான ஓய்வு கால பலன்களை, தாமதமின்றி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.