போக்குவரத்து ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
சென்னை:போக்குவரத்து ஊழியர்கள், நேற்று நான்காவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நுாற்றுக்கணக்கான ஊழியர்கள், அரை நிர்வாணத்துடன் பங்கேற்று, கோஷங்கள் எழுப்பினர். அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நான்காவது நாளாக, மாநிலம் முழுதும், 15 இடங்களில், நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருநெல்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அரை நிர்வாணத்துடனும், துாக்கு கயிறை கையில் ஏந்தியபடியும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல், சென்னையில் அயனாவரம், வடபழனி உள்ளிட்ட பணிமனைகளில், தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாநகர போக்குவரத்து கழக பிரிவு தலைவர் துரை, பொதுசெயலர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இது குறித்து, சி.ஐ.டி.யு.,வின் மாநகர போக்குவரத்து கழக பிரிவு பொதுசெயலர் தயானந்தம் கூறுகையில், ''போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு ஏற்று, உறுதி அளிக்கும் வரை, எங்களது போராட்டம் தொடர்ந்து நடக்கும்,'' என்றார். இதற்கிடையே, ''போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு, தி.மு.க., அரசு தீர்வு காண வேண்டும்,'' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.