உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே இடத்தில் இருதரப்புக்கு பட்டா நடுத்தெருவில் நிற்கும் பழங்குடியினர் 50 ஆண்டு வழக்கு தீர்ந்தும், குழப்பம் தீரவில்லை

ஒரே இடத்தில் இருதரப்புக்கு பட்டா நடுத்தெருவில் நிற்கும் பழங்குடியினர் 50 ஆண்டு வழக்கு தீர்ந்தும், குழப்பம் தீரவில்லை

பந்தலுார்: பந்தலுார் அருகே கடலைக்கொல்லி கிராமத்தில், முன்னாள் பிரதமர் வழங்கிய பட்டா நிலத்திற்கு, மாநில அரசு மீண்டும் பட்டா வழங்கியதால், பாதிக்கப்பட்டுள்ள மண்ணின் மைந்தர்கள் நீதி கேட்டு நீலகிரி கலெக்டரிடம் முறையிட்டனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 20 அம்ச திட்டத்தின் கீழ், 1976ல், நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த, 10 பேருக்கு தலா 1 ஏக்கர் வீதம் கடலைக்கொல்லி கிராமத்தில் நிலம் வழங்கினார். அதே ஆண்டு நவ., 19ம் தேதி, அப்போதைய கலெக்டர் இன்பசாகரன் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். பட்டா பெற்ற பயனாளிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றபோது, குறிப்பிட்ட நிலம் தனியார் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், பயனாளிகளுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாநில அரசு பட்டா இதுகுறித்து, கலெக்டர் மற்றும் முதல்வருக்கு மனு அனுப்பியும் தீர்வு கிடைக்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகள் வழக்கு நடந்த நிலையில், அந்த நிலத்தில் பழங்குடியினர் மற்றும் பிற சமுதாயத்தினர் தேயிலை விவசாயம் செய்தும், வீடு கட்டியும் குடியேறினர். அவர்களுக்கு, 1981ல் மாநில அரசு பட்டா வழங்கியது. இந்நிலையில், 'பட்டா பெற்றவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும்' என, கூடலுார் நீதிமன்றம் கடந்த மாதம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, ஆக., 20ம் தேதி நில அளவை செய்யப்பட்டு, 10 பயனாளிகளில் ஐந்து பேருக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், 'கடந்த 1981ல் இந்த பகுதியில் அரசு எங்களுக்கு நில பட்டா வழங்கியது. இதன் அடிப்படையில் அங்கு குடியிருப்புகள் கட்டியும், விவசாயம் மேற்கொண்டும் வருகிறோம். தற்போது, எங்களை வெளியேற கூறினால் எங்கு செல்வோம். 'எங்களிடமும் அரசின் பட்டா உள்ளது' எனக்கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், கலெக்டரிடம் நேற்று புகார் அளித்தனர். எங்கு செல்வோம் பழங்குடியின மக்கள் கூறுகையில், 'எங்களுக்கு பட்டா வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை பூட்டி எங்களை வெளியேற்றுவதால், குடியிருக்க இடமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். 1976ல் மத்திய அரசு மூலம் வழங்கப்பட்ட பட்டா நிலத்திற்கு, மாநில அரசு 1981ல் மீண்டும் பட்டா வழங்கியதில் எங்கள் குற்றம் ஏதும் இல்லை. 'அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் வழங்கப்பட்ட பட்டாவில் ஏற்பட்ட குழப்பம் குறித்து, கலெக்டர் உரிய ஆய்வு செய்து, மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு, வாழும் நிலத்தை வழங்க வேண்டும். சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றினால், நாங்கள் எங்கு செல்வோம்' என்றனர். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில், “இந்த பிரச்னை குறித்து பழங்குடி மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்த்தாக எனக்கு தகவல் வரவில்லை. தகவல் வந்ததும் உரிய ஆய்வு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி