ஏ.சி.எஸ்., கல்லுாரியிடம் இழப்பீடு வசூலிக்க தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை:சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டிய, சென்னையை அடுத்த நுாம்பலில் உள்ள ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடம், சுற்றுச்சூழல் இழப்பீட்டை வசூலிக்க, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா, நுாம்பலில் ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லுாரி உள்ளது. இங்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மருத்துவக் கல்லுாரி, மாணவர்கள் விடுதி மற்றும் மருத்துவமனை கட்டுப்பட்டுள்ளது. எனவே, கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, தியாகராஜன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:நுாம்பலில் உள்ள ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், கல்லுாரி, விடுதி மற்றும் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளன. கட்டடம் கட்டப்பட்ட பிறகே சுற்றுச்சூழலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்ட காலத்திற்கு, சுற்றுச்சூழல் இழப்பீட்டை கணக்கிட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வசூலிக்க வேண்டும். சுற்றுச்சூழல் இழப்பீட்டை கல்லுாரி நிர்வாகம் செலுத்தும் வரை, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.