ஏரியில் மண் ஏற்ற வந்த லாரிகள் சிறைபிடிப்பு உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மண் எடுக்க வந்த 40க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து, திருப்பி அனுப்பினர்.உளுந்தூர்பேட்டை தாலுகா, பில்லூர் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப்பணித் துறை ஏரி உள்ளது. இந்த ஏரியில் கிராவல் மண் அடிப்பதற்கு கலெக்டர் மற்றும் தாசில்தாரின் அனுமதி பெற்று, 40க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் மண் எடுப்பதற்காக நேற்று காலை 11.00 மணியளவில் அங்கு சென்றனர்.இதனை அறிந்த பில்லூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மண் ஏற்ற வந்த டாரஸ் லாரிகளை சிறை பிடித்தனர்.லாரி டிரைவர்கள், 'ஏரியில் மண் எடுப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி கடிதம் பெற்று, ஊராட்சியில் செலவின தொகையாக ரூ. 15 லட்சம் கொடுத்துள்ளோம். பின் ஏன் தடுக்கிறீர்கள்' என கேட்டனர்.அதற்கு பில்லூர் மற்றும் பள்ளியந்தாங்கல் கிராமங்களுக்கு பொதுவான இந்த ஏரியில் எங்களிடம் அனுமதி பெறவில்லை என்பதால் ஏரியில் மண் எடுக்கக் கூடாது என கூறினர்.தகவலறித்து, எடைக்கல் போலீசார் சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். இரு கிராமங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை சமரசம் செய்யாமல் ஏரியில் மண் எடுக்க கூடாது என போலீசார் அறிவுறுத்தி, டாரஸ் லாரிகளை விடுவித்து திருப்பி அனுப்பினர்.இதனால் ஏரியில் மண் எடுக்க வந்த டாரஸ் லாரிகள் மண் எடுக்காமல் மாலை 3.00 மணியளவில் திரும்பிச் சென்றன.