பெண்ணிடம் ஆபாச பேச்சு டியூஷன் ஆசிரியர் கைது
செங்கல்பட்டு:இளம்பெண்ணிடம் மொபைல் போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த, 'டியூஷன்' ஆசிரியரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர், சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இப்பெண், 2009ம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தில், மணிகண்டன் என்பவரிடம் 10ம் வகுப்பு டியூஷன் சென்றுள்ளார். மணிகண்டனுக்கு திருமணமாகி, தற்போது சென்னை கிண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன், தன்னிடம் டியூஷன் படித்த இப்பெண்ணுக்கு, அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி, தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண், ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் விசாரித்ததில், டியூஷன் ஆசிரியர் மணிகண்டன் இப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது உறுதியானது. இதையடுத்து, நேற்று மணிகண்டனை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.