சர்வதேச அளவில் கவனம் பெற்ற கரூர் துயர சம்பவம்: சீனா இரங்கல்
பீஜிங்; கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அறிந்த சீனா, இரங்கல் செய்தியை வெளியிட்டு இருக்கிறது. கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலின் தாக்கம் இன்னமும் பலரின் மனதைவிட்டு அகலவில்லை. தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த பலர், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.தமிழக அரசு அமைத்துள்ள ஒருநபர் ஆணையம் தமது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வதந்தி பரப்புவோரை அடையாளம் கண்டு தமிழக காவல்துறை கைது நடவடிக்கைகளையும் வேகப்படுத்தி உள்ளது. சம்பவத்தின் தன்மையை கருத்தில் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்த துயர சம்பவம் பற்றிய செய்திகள் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் வளைகுடா நாடுகளில் பேசு பொருளாக மாறியதோடு, அந்நாடுகளில் உள்ளோர் தங்கள் இரங்கல்களையும் பதிவு செய்தனர். இந் நிலையில், கரூர் துயர சம்பவம் குறித்து சீனா தமது ஆழ்ந்த இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஒரு எக்ஸ் வலைதள பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது; தமிழகத்தின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் அதில் இருந்து குணம் அடைந்து வலிமை பெற பிரார்த்திக்கிறோம்.இவ்வாறு அந்த பதிவில் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.