உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா சாக்லெட் ஒரு கிலோ பறிமுதல் நேபாளத்தை சேர்ந்த இருவர் கைது 

கஞ்சா சாக்லெட் ஒரு கிலோ பறிமுதல் நேபாளத்தை சேர்ந்த இருவர் கைது 

பொள்ளாச்சி: 'ஆன்லைனில்' ஆர்டர் செய்து, கஞ்சா சாக்லெட் வாங்கிய நேபாள நாட்டை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா, கஞ்சா சாக்லெட் புழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வடமாநிலத்தவர் வாயிலாக இப்பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி அருகே தாளக்கரை தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றும் நேபாள நாட்டை சேர்ந்த ஸ்ரீதேவ்குமார், 18, சஞ்ஜிப்குமார் யாதவ், 23, ஆகியோர், கஞ்சா சாக்லெட் சொந்த உபயோகத்துக்கும், விற்பனைக்காகவும் வைத்திருப்பதாக, ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் மற்றும் தனிப்படை எஸ்.ஐ., கவுதம் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்றுமுன்தினம் தனிப்படை மற்றும் தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, நேபாளத்தை சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். ஒரு கிலோ கஞ்சா சாக்லெட் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, ஜே.எம்., 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

போலீசார் கூறியதாவது:

நேபாளத்தை சேர்ந்த இருவரும், 'ஆன்லைன்' வாயிலாக கஞ்சா சாக்லெட்டை வாங்கியுள்ளனர். இந்த சாக்லெட்டுகள், லக்னோவில் தயாரிக்கப்படுவதாகவும், கஞ்சா சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.'ஆன்லைனில்' விற்பனை செய்யும் இந்த சாக்லெட்டுகளில், 'கஞ்சா' என்ற வாசகம் மறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது வட மாநிலங்களில், திராட்சை, ஏலக்காய் போன்றவற்றுடன் கஞ்சாவும் கலந்து ஆயுர்வேத மருந்து என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில், கஞ்சா பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளதால் இவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:46

மசாலா பூரி ,ஷவர்மா , பாணிபுரியில் MSG கலப்பது போன்று இங்குமா ?


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜன 21, 2025 07:37

தமிழகத்தில் திமுகவின் திராவிடமாடல் ஆட்சியில் கஞ்சா, மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற போதை வஸ்துகள் எவ்வித சிரமும் இல்லாமல் தங்கு தடையின்றி கிடைக்கிறது இதை பயன்படுத்துவோரில் கல்லூரி மாணவர்களை விட பள்ளி மாணவர்கள்தான் அதிகம் என்பது மிகவும் வேதனைக்குரிய பெற்றோர்களை அச்சமடைய வைக்கும் விஷயம். இந்த திருட்டு திமுக ஆட்சி வரும்காலத்திலும் தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாகி விடும் என்பது உறுதி.


புதிய வீடியோ