திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வாழைப்பழம் வியாபாரத்திற்கு வந்த இளம்பெண்ணை தாய் கண்ணெதிரே பாலியல் பலாத்காரம் செய்த இரு காவலர்கள் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் ஆயுதபூஜைக்கு வாழைப்பழங்களை விற்க ஆந்திர மாநிலத்தில் இருந்து மினி லாரியில் வாழைப்பழம் லோடு ஏற்றிக்கொண்டு 50 வயது பெண் தன் 22 வயது மகள் மற்றும் உறவினரான 30 வயது வாலிபருடன் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வந்துள்ளார். திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் ஏந்தல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் காவலர்கள் சுரேஷ் 33, சுந்தர் 39 ஆகியோர் மினி லாரியை சோதனை செய்தனர். வாலிபரை மினி லாரியில் இருக்க சொல்லிவிட்டு தாய், மகளை விசாரணை என்ற பெயரில் இரு காவலர்களும் அழைத்துச் சென்றனர். புதர் பகுதிக்கு அழைத்து சென்று தாய் கண்முன்னே மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு தாய் மகளை அங்கிருந்து அனுப்பி விட்டனர். திருவண்ணாமலை மகளிர் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். அதிகாலை 5:00 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று காவலர்கள் சுரேஷ், சுந்தர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வியாபாரத்திற்கு வந்த பெண்ணை தாய் கண்ணெதிரே காவலர்கள் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள் ளது.
இது தான் திராவிட மாடலா
ஆளும் தி.மு.க. ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம். தி.மு.க., ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே காமுகர்களாக உருமாறி வருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா. - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்
கொடூரத்தின் உச்சம்
பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூரத்தின் உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களால் பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார். இந்த வெட்கக்கேடான நிலைக்கு தி.மு.க., அரசு தலைகுனிய வேண்டும். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல் துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களை இந்த அரசு தள்ளியுள்ளது. - பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்
வெட்கப்பட வேண்டும்
போலீசாரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். - அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்