சென்னையில் 334 இடங்களில் வெள்ளம் நேரடி ஆய்வுக்கு பின் உதயநிதி தகவல்
சென்னை:''சென்னையில் பெய்து வரும் மழையால், 334 இடங்களில் மழைநீர் தேக்கம் காணப்படுகிறது. ஒற்றுமையுடன் செயல்பட்டு, புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவோம்,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார். 27 மரங்கள் விழுந்தன
அப்போது, பொது மக்களிடம் பேசி குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, புரசைவாக்கம், வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட, 12 இடங்களில் ஆய்வு செய்தார்.முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி:சென்னையில், 334 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அவற்றில், 12 இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. மழை நீரை அகற்றும் பணிக்காக, 1,700 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மழையால் நேற்று பிற்பகல் வரை, 27 மரங்கள் விழுந்தன. மாநகரில் உள்ள, 22 சுரங்கப்பாதைகளில், ஆறு மூடப்பட்டுள்ளன. தாழ்வான மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு, 329 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 120 பொது சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை, 199 பேர் அழைத்து வரப்பட்டு, எட்டு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் உட்பட, 2.32 லட்சம் பேருக்கு உணவுகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. அதேபோல், அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள்
தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்க, 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் அகற்றும் பணியில், 22,000 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், தன்னார்வலர்களும் பணியில் உள்ளனர். அதேபோல, கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும், 524 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பில் மீட்பு பணிகள் நடக்கின்றன. இதனால், மழையால் பெருமளவு பாதிப்பில்லை. மழை நின்ற ஓரிரு மணி நேரங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.மக்கள் பதற்றமடைய வேண்டாம். மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் இயற்கை சீற்றங்களில், ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டு வந்துள்ளோம். தற்போதும் மீண்டு வருவோம். பொது மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்.இவ்வாறு கூறினார்.