உதயநிதியின் சனாதன வழக்கு 2026 பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு
சனாதனம் குறித்து தமி ழக துணை முதல்வர் உதயநிதி பேசியது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு நீதி மன்றம் ஒத்திவைத்தது. கடந்த 2023ல், சனாதன தர்மம் தொடர்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக மாற்றி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கோரி, உதயநிதி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை கடந்த மார்ச்சில் விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து உதயநிதிக்கு விலக்கு அளித்தது. இதற்கிடையே, மஹாராஷ்டிராவில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை உதயநிதி தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், 'இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி இருக்கிறது. 'தற்போது அதற்கான நேரம் இல்லை. எனவே, வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் பட்டியலிட்டு விசாரிக்க உத்தரவிடுகிறோம்' எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர். -டில்லி சிறப்பு நிருபர்-