உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழி கல்வியில் அரசியல் செய்கிறது தமிழக அரசு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

மும்மொழி கல்வியில் அரசியல் செய்கிறது தமிழக அரசு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

சென்னை: ''மும்மொழி கல்வி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசு, எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கவில்லை,'' என, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழக பள்ளி கல்வித் துறைக்கான கல்வி நிதி விவகாரம், அரசியல் சார்ந்த பிரச்னை. இதை நான் பலமுறை தெரிவித்துள்ளேன். தேசிய கல்வி கொள்கையை நாடே ஏற்றுக் கொண்டுள்ளது. நாம் அதன்படி செல்ல வேண்டும். நிதி பெற்றுள்ளது மத்திய அரசு சார்பில், தமிழக அரசுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுகிறது. 'பி.எம்., போஷன்' திட்டத்தின் கீழ், மதிய உணவு திட்டத்துக்கான நிதி, தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும், தமிழக அரசு நிதி பெற்றுள்ளது. நிதி வழங்கவில்லை என்று சொல்ல முடியாது. 'உல்லாஸ்' திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படுகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த வழக்கில், நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்துள்ளது. இதில், முதன்மை பொறுப்பு மாநில அரசுக்கே உண்டு என கூறியுள்ளது; மத்திய அரசுக்கும் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. இது குறித்து, தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் என்னை நேரில் சந்தித்தார். ஆர்.டி.இ., எனும் கட்டாய கல்வி உரிமை சட்டம் விவகாரத்தில், முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தேன். 'சமக்ர சிக்ஷா' திட்டத்தில், மத்திய அரசின் ஒப்பந்தத்தை, தமிழக அரசு ஏற்க வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக மாணவர்களின் நலனை விட, அவர்கள் அரசியலை திணிப்பது சரியானது அல்ல. அனைத்து வகை ஒத்துழை ப்புகளுக்கும் தயாராக இருக்கிறேன். ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கை தொடர்பாக, மாநில கல்வி அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் நீதி மன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு உள்ளோம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ஏற்கனவே மாணவர்கள் பழமொ ழிக ளை கற்று வருகின்றனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் துவக்கப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் கற்பிக்கப்படுகின்றன. பின், ஏன் மூன்றாவது மொழி பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இது, தமிழக அரசின் அரசியல் நிலைப்பாடு. அது, சிறுபான்மை கல்வி நிறுவனங்களாக கூட இருக்கலாம். ஆனால், இங்கு பிரச்னை மூன்றாவது மொழி தான். மத்திய அரசு, எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. திணிக்கவில்லை புதிய கல்வி கொள்கையானது, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, மூன்று மொழிகள் கற்க பரிந்துரைக்கிறது. ஒன்று தாய் மொழி, மற்ற இரண்டும் விருப்ப மொழிகள். மத்திய அரசு எந்த மொழியையும், எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கவில்லை. சிலர் அரசியல் நோக்கத்திற்காக, இந்த சமூகத்தில் தவறான தகவல்களை பரப்புகின்றனர். நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள், மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டு, புதிய கல்வி கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. உத்தர பிரதேச மாநில மாணவர்கள், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக மராட்டியும், சிலர் தமிழ் மொழியும் படிக்கின்றனர். நாட்டில், 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகின்றனர். மீதமுள்ளவர்கள் தாய் மொழி பேசுகின்றனர். சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும் போது, 'உலகத்துடன் போட்டியிட, எங்கள் மாணவர்களுக்கு, 10 மொழிகளை கற்றுக் கொடுப்போம்' என்றார். மொழி என்பது தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மொழி பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது தவறானது. நான் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவன். ஒடியா மொழி பேசுவதில் எனக்கு பெருமை உள்ளது. அதேபோல, மற்ற இந்திய மொழிகளையும் நேசிக்கிறேன். நாம் ஆங்கிலத்தை ஏற்கும் போது, மற்ற இந்திய மொழிகளை ஏற்க ஏன் தயங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை