வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பருத்தி உற்பத்தி அவசியம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை: ''வளர்ந்த நாடுகளுக்கு இணையாக பருத்தி உற்பத்தி, ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும்,'' என, மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் பேசினார்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த, தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம், கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது.மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமை வகித்தனர். சிவ்ராஜ்சிங் சவுகான் பேசியதாவது:பருத்தி உற்பத்தியில் பல்வேறு சவால்கள் உள்ளன. இந்திய பருத்தி உற்பத்தி உலக சராசரியை காட்டிலும் குறைவு. விஞ்ஞானிகள் தெளிவான 'ரூட் மேப்' உருவாக்க வேண்டியது அவசியம்.மண்டலம் மற்றும் வானிலைக்கு ஏற்ப பயிர் ரகங்கள், இயந்திரங்கள் உருவாக்க வேண்டும். சிறிய நிலங்களிலும் பயன்படுத்தும் இயந்திரங்களை வடிவமைக்க வேண்டும். பருத்தி உற்பத்தியில் ஏ.ஐ., ரோபோட் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.இறக்குமதி செய்யாமல் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உற்பத்தி, ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும்.பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலப்படம் விவசாயிகளை பாதிக்கிறது. கலப்படம் செய்பவர்கள் அபராதம் செலுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர். இதற்கு கடுமையான நடவடிக்கையுடன் புதிய கட்டுப்பாடுகள் வகுக்கப்படும்.அதிகாரிகள், விவசாயிகள், விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மாறவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், ''2030க்குள் உலக பருத்தி உற்பத்தி சராசரியை தாண்டும் வகையில், ஒருமித்த திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.