உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட மாற்று முறைகளை அரசு பயன்படுத்தலாம் : நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தல்

சட்ட மாற்று முறைகளை அரசு பயன்படுத்தலாம் : நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தல்

சென்னை : 'பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண, மாற்று முறைகளை பயன்படுத்துவதை அரசு பரிசீலிக்கலாம். சட்டப் பிரச்னை இருந்தால் மட்டுமே, ஐகோர்ட்டில் அரசு அப்பீல் செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் வலியுறுத்தினார். ஐகோர்ட் வளாகத்தில், மாற்று முறை தீர்வு மைய கட்டட அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. 4 கோடியே, 20 லட்ச ரூபாய் செலவில் இது கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகளை கொண்டதாக இருக்கும்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்டமாஸ் கபீர், அடிக்கல் நாட்டி பேசியதாவது: மக்கள் தொகை பெருக்கத்தால் பிரச்னைகள், வழக்குகள் அதிகரிக்கின்றன. சமரச மையம், மத்தியஸ்தம், லோக் அதாலத் என, மாற்று முறைகள் மூலம், பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். மாற்றுமுறை தீர்வு மையங்கள் மூலம் பெறப்படும் தீர்ப்புகளும், சிவில் கோர்ட்டுகள் வழங்கும் உத்தரவுகளைப் போன்றது தான். இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாற்றுமுறை தீர்வு மையத்துக்கான கட்டடம் கட்டுவதற்கு, 650 கோடி ரூபாயை, 13வது நிதி கமிஷன் ஒதுக்கியுள்ளது.லோக் அதாலத், சமரச மையம், மத்தியஸ்தம் போன்ற மாற்று முறை தீர்வு மையங்களால், தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படும் என, வழக்கறிஞர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. வழக்குகளை விரைந்து, செலவின்றி விசாரித்து தீர்வு காண்பதன் மூலம், வழக்கறிஞர்களை தேடி, வழக்காடுபவர்கள் அதிகம் வருவர். எனவே, அவர்கள் பயப்பட தேவையில்லை. மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு நாள் மெகா லோக் அதாலத்தில், ஆறு லட்சத்துக்கும் மேல் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. கர்நாடகாவில் நடந்த ஒரு நாள் லோக் அதாலத்தில், 1 லட்சத்து, 75 ஆயிரம் வழக்குகள் பைசல் செய்யப்பட்டன. இவ்வாறு நீதிபதி அல்டமாஸ் கபீர் பேசினார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேசியதாவது: நீதி வழங்குவதற்கு ஏற்படும் கால தாமதம் தான் தற்போது சவாலாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம், 10 லட்சம் பேருக்கு, 10 நீதிபதிகள் உள்ளது, உள்கட்டமைப்பு வசதி குறைவு, நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் குறைவான தொகை, அதிக விழிப்புணர்வு, புதிய சட்டங்களின் தாக்கம், எளிதான அணுகுமுறை போன்றவை தான் வழக்குகள் பெருக்கத்துக்கும், கால தாமதத்துக்கும் காரணங்கள். சென்னை ஐகோர்ட்டில், கடந்த ஆண்டு இறுதி வரை, நான்கு லட்சத்துக்கும் மேல் சிவில் வழக்குகள் நிலுவையில் இருந்தன. கிரிமினல் வழக்குகள், 46 ஆயிரத்து, 791 நிலுவையில் இருந்தன. சீனா, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளிலும், பல ஆண்டுகளாக மாற்று முறைகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கும், காலதாமதமாக பைசல் செய்வதற்கும், அரசின் பங்கும் உள்ளது. பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண, மாற்று முறை தீர்வுகளை பயன்படுத்துவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டப் பிரச்னைகள் இருந்தால் மட்டுமே, ஐகோர்ட்டுக்கு அரசு அப்பீல் செய்ய வேண்டும். கோர்ட் அவமதிப்பு வழக்கை தவிர்க்க, தீர்ப்புகளை முறையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண, வழக்காடுபவர்களிடம் நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும். விபத்து வழக்குகள், நுகர்வோர் பாதுகாப்பு வழக்குகள், ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு கோரும் வழக்குகளுக்கு, மாற்றுமுறை தீர்வு மையங்கள் மூலம் தீர்வு காணலாம்.இவ்வாறு நீதிபதி சதாசிவம் பேசினார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பேசும் போது, ''லோக் அதாலத், சமரச மையம், மத்தியஸ்தம் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. சென்னையில் கட்டப்பட உள்ள கட்டடம், மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரி கட்டடமாக திகழும். ''ஐகோர்ட் அருகில் பஸ்கள் நிறுத்தும் இடத்தை எங்களுக்கு வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளேன். அந்த இடத்தை வழங்கினால், அங்கு தீர்ப்பாயங்கள், சிறப்பு கோர்ட்டுகள் மாற்றப்படும். லோக் அதாலத் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேலான வழக்குகளில், 2,312 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது'' என்றார். ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி வரவேற்றார். நீதிபதிகள் தர்மாராவ், டி.முருகேசன், நாகப்பன், சட்ட அமைச்சர் செந்தமிழன், அட்வகேட் - ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். நீதிபதி பானுமதி நன்றி கூறினார். விழாவில், ஐகோர்ட் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுமுறை தீர்வுமையங்களால் என்ன பலன்?

கோர்ட் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண்பது ஒருபுறம் இருந்தாலும், மாற்றுமுறை தீர்வு மையங்கள் மூலமும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம், சமரச மையம், மத்தியஸ்த மையம் ஆகியவை தான், மாற்றுமுறை தீர்வு மையங்கள் என அழைக்கப்படுகின்றன. கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, சமரச மையம் மூலம் தீர்வு காண வழக்கு தொடுத்தவர் மற்றும் எதிர் தரப்பினர் விரும்பினால், அந்த வழக்கை சமரச தீர்வு மையத்தின் விசாரணைக்கு அனுப்ப கோரலாம். அப்படி அனுப்பும் போது, இருதரப்பினரும் அந்த மையத்தில் ஆஜராகி, தங்கள் பிரச்னையை கூறலாம். பிரச்னைகளை பேசி தீர்ப்பதில் பயிற்சி பெற்றவர்கள் நடுவராக இருப்பர். வழக்கு தொடுத்தவர்கள் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட அவர்கள் உதவுவர்.

இருதரப்பிலும் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டால், உடனே அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை தீர்வு காணப்படவில்லை என்றால், இருதரப்பும் கோர்ட்டை அணுகி தங்கள் வழக்கை தொடர்ந்து நடத்த கோரலாம். லோக் அதாலத்திலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மத்தியஸ்தராக செயல்படுவர். உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவர். விபத்துகளில் நஷ்டஈடு கோரும் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், கிரெடிட் கார்டு தொடர்பான வழக்குகள், பென்ஷன் வழக்குகள் போன்றவை இந்த மையங்களில் பெரும்பாலும் விசாரிக்கப்படுகின்றன. சமரச மையம் மூலம் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிறுவனப் பிரச்னை தீர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1994ல், இந்நிறுவனம் மூடப்பட்டது. சமரச மையத்தின் மூலம் தொழிலாளர்கள், நிதி நிறுவனங்களுக்கு தர வேண்டிய பணப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின், சமரச மையத்தில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை