UPDATED : ஜன 10, 2025 06:11 AM | ADDED : ஜன 10, 2025 05:28 AM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று(ஜன.,10) காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xiv2c2st&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.15 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள், ரங்கா.. ரங்கா.. கோஷம் விண்ணை முட்ட தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
பெருமாள் கோவில்களில் விழாக்கோலம் :
தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும், வெகு சிறப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ திருத்தலங்களிலும், நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.