சென்னை:''சிந்துவெளி முதல் இலங்கை வரை, பரந்து விரிந்துள்ள தமிழர் வரலாற்றை தொகுக்க வேண்டும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் நேற்று, செய்தி, தமிழர் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது:இந்தியாவின் வரலாற்றை, தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தை தாண்டி இமயம் வரையும், இலங்கையிலும், தமிழர்கள் வாழ்ந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வாயிலாக, சிந்துவெளி முதல் கீழடி, இலங்கை வரை, தமிழர் வரலாற்றை தொகுத்து வெளியிட வேண்டும்.தமிழக தொல்குடிகளின் அறிவு நுட்பங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க, மாவட்ட தலைநகரங்களில், நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை காக்க, நவீனத்தையும், நாட்டுப்புற கலைகளையும் இணைத்து புதுமையை புகுத்த, கலை ஆய்வகத்தை அமைக்க வேண்டும்.நாட்டுப்புற விளையாட்டுகளை பாதுகாக்க, சென்னை, மதுரையில் நாட்டுப்புற விளையாட்டு மையம் அமைக்க வேண்டும். எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன், பெருமாள் முருகன் ஆகியோர், அவரவர் பகுதிகளின் வட்டார வழக்கு சொல் அகராதிகளை உருவாக்கியுள்ளனர். அனைத்து பகுதி வட்டார வழக்கு சொல் அகராதிகளை, அரசே உருவாக்க வேண்டும். கருணாநிதி பிறந்த நாளை, மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.