மேலும் செய்திகள்
வி.சி.க., தலைவர் யார்: கேட்கிறார் அண்ணாமலை!
08-Dec-2024
கோவை: ''வி.சி., கட்சி, திருமாவளவன் கையில் இல்லை, என, கோவையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி:
ஆதவ் அர்ஜூனா லாட்டரி அதிபரின் மருமகன். இவ்வளவு நாட்கள், சபரீசனுக்கு நெருக்கமாக இருந்தவர். 2021ல், 509 கோடி ரூபாயை தி.மு.க.,வுக்கு 'எலக்ட்ரோல் பாண்டில்' நன்கொடை பெற்றுக் கொடுத்தவர். தற்போது வி.சி., துணை பொதுச் செயலர். அரசியல் வியாபாரம்
ஆனால், வி.சி., கட்சி, தலைவராக இருக்கும் திருமாவளவன் கையில் இல்லை; லாட்டரி விற்பனை செய்பவரின் கையில் தான் உள்ளது. அம்பேத்கரை வைத்து எந்த அளவிற்கு அரசியல் வியாபாரம் நடைபெறுகிறது என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். சமீபத்தில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க., தலைவர் விஜய் மணிப்பூர் மாநில பிரச்னை குறித்து பேசியிருக்கிறார். மாநில பிரச்னையில் இருக்கும் முழு அரசியல் வரலாற்றையும் தெரியாமல் அவர் ஏதேதோ பேசி இருக்கிறார். முக்கியமான ஒரு பிரச்னை குறித்து பேசுவதற்கு முன், அதன் முழு வரலாற்றையும் தெரிந்து பேச வேண்டும். விஜய் அரசியல் பொது அறிவு பெறுவது அவசியம். மணிப்பூரில், எந்த ஆட்சியில் பிரச்னை அதிகமாக இருந்தது?பா.ஜ., முதல்வர் வீடு கொளுத்தப்பட்டது; அமைச்சர்களின் வீடு எரிக்கப்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கியால் சுடவில்லை. பா.ஜ., ஆட்சியில் தான், அங்கிருந்த ஆயுதப்படை வாபஸ் பெறப்பட்டது. மணிப்பூரில் உள்ள நிலையை அறிய, யார் வருவதாக இருந்தாலும் அவர்களை அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறேன். 2006 முதல் 2013 வரை மணிப்பூரில் ஏராளமான கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பரிமாற்றம் நடந்துள்ளது. அங்கே, பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.அங்குள்ள ஜாதி பிரச்னையை நாம் அனைவரும் சேர்ந்து தான் சரி செய்ய முடியும். ஜனநாயகத்தின் மூலமாக சரி செய்ய முடியுமே தவிர, துப்பாக்கி ஏந்தி அவர்கள் மேடையில் ஏறி சரி செய்யும் அளவிற்கு, நாம் தரம் தாழ்ந்து போகவில்லை. மிரட்டலுக்கு பயமில்லை
நான் ஆக்ஸ்போர்டில் படித்த நேரத்தில், செந்தில் பாலாஜி கம்பி எண்ணி அதைப் படித்துக் கொண்டிருந்தார். அவர் தைரியமான ஆளாக இருந்தால் என் மீது, கேஸ் போடட்டும். நியாயத்தை கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். நான் மரியாதை கொடுக்கக்கூடியவன். உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவன் அல்ல. தி.மு.க., அமைச்சர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்; மீண்டும் ஓராண்டுக்கு பின்னால், நடந்ததை திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. ஆரோக்கியமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன். வைக்கம் போராட்டத்தை நினைவுபடுத்தும் நாளுக்காக, கேரளா போகிறோம் என்று சொல்பவர்கள், தயவு செய்து கேரள அரசு தமிழக உரிமைகளை, எப்படி மறுக்கிறார்கள் என்பதையும், அப்போது கேரள அரசிடம் எழுத்துப் பூர்வமாக கொடுத்து விட்டு வாருங்கள்.பட்டியலின சகோதரர், சகோதரிகளை மையப்படுத்தி தமிழக அரசு நகர்வது நல்லது. பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் கொடுத்து, அவர்களை உயர் பதவியில் அமர்த்த வேண்டும்.திருமாவளவன் ஒரு சாமர்த்தியமான தலைவர். தமிழக அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாக வந்தது, சாதாரணமானது அல்ல. நான்தான் ஆதவ் அர்ஜுனாவை, நுால் வெளியீட்டு விழாவுக்கு அனுப்பி இருந்தேன் என திருமா கூறுகிறார் என்றால், ஆதவ் பேசிய கருத்துக்கும் அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
08-Dec-2024