தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசுகிறார்: பழனிசாமி
ஓமலுார்:'தி.மு.க., - த.வெ.க., இடையே போட்டி' என, நடிகர் விஜய் பேசியது குறித்து, பழனிசாமியிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு தலைவரும் கட்சி வளர்ச்சி, தொண்டர்களை உற்சாகப்படுத்த, இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பர்; தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க., தான்,'' என்றார்.சேலம் மாவட்டம், ஓமலுாரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி:தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் தொடர் கதையாகி உள்ளன. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. ஸ்டாலின் திறமையற்ற முதல்வராக உள்ளார். இவற்றையெல்லாம் தடுக்க, சட்டசபையில் பேச முயன்றால், அனுமதி மறுக்கப்படுகிறது. திட்டமிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவரிடம், 'வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி' என, நடிகர் விஜய் பேசியிருக்கிறாரே என கேட்டதும், ''அது அவரது கருத்து. ஒவ்வொரு தலைவரும் கட்சி வளர்ச்சி, தொண்டர்களை உற்சாகப்படுத்த, இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பர். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க., தான் என்பதை மக்களே ஏற்று, அதற்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். இதில் யாருக்கும் மாற்று கருத்து தேவையில்லை,'' என்றார்.முன்னதாக, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் முன், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. பழனிசாமி நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு வழங்கினார்.