உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய், 45 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, 'தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பிறக்குது' என்ற கொள்கை விளக்க பாடலையும் வெளியிட்டார். கொடியின் மேலேயும், கீழேயும் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளது. மஞ்சளின் நடுவே, வாகை பூவும், அதை சுற்றி, 23 சிறிய நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. வாகை பூவின் வலது மற்றும் இடது பக்கத்தில், பிளிரும் போர் யானைகள் உள்ளன.கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில், 'என்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். விழாவில், விஜய் பேசியதாவது:கட்சியின் முதல் மாநாட்டு தேதியை விரைவில் அறிவிப்பேன். மாநாட்டில் கட்சி கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பேன். கொடிக்கு பின்னால், ஒரு வரலாற்று பின்னணி உள்ளது; அதையும் தெரிவிப்பேன்.இதுவரை நமக்காக உழைத்தோம். இனி, சட்டரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு, தமிழகத்திற்காக உழைப்போம். நான் சொல்லாமலேயே, தொண்டர்கள் தங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் கட்சிக் கொடியை ஏற்றுவர். ஆனால், உரிய அனுமதி பெற்று, கட்சி கொடியை ஏற்ற வேண்டும். இதை, நான் கட்சி கொடியாக பார்க்கவில்லை. தமிழகத்தின் வருங்கால தலைமுறைக்கான கொடியாக பார்க்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

சினிமா பாணியில்

சினிமா காட்சி போல, கட்சி கொடி அறிமுகத்திற்கான வீடியோ காட்சி ஒன்று வெளியிடப் பட்டது. அதில், போர்க்களத்தில் மத யானைகளுடன் வீரர்களை கொன்று குவிப்பதும், குதிரையில் வரும் விஜய், கட்சி கொடியில் வரும் இரு யானைகளை வைத்து, மத யானைகளை அடக்கி, மக்களை காப்பது போலவும் காட்சி உள்ளது. அதன் பின்னணியில், புதிய கட்சி கொடி அறிமுகம் செய்யப்படுகிறது. அப்போது, 'தமிழன் கொடி பறக்குது... தலைவர் யுகம் பொறக்குது...' என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரில், முதலில், 'க்' என்ற ஒற்றெழுத்து இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை விஜய் திருத்திக் கொண்டார். கட்சியை பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தில், முறையான ஆவணங்கள் இல்லை என, தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பின், சரியான வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் தரப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கட்சி கொடியில், பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் உள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

பகுஜன் சமாஜ் எதிர்ப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆனந்தன் அறிக்கை:இந்திய தேர்தல் ஆணையத்தால், 1968ம் ஆண்டு சின்னம் தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 2004 முதல் அசாம், சிக்கிம் தவிர, மற்ற மாநிலங்களின் கட்சிக் கொடிகளில் யானை சின்னம் இடம் பெறக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. விஜய் கட்சி கொடியில் யானை சின்னம் இருப்பது குறித்து, எங்கள் கட்சியின் தேசிய தலைமைக்கு தெரிவித்துள்ளோம். தேசிய தலைமை அறிவுரைப்படி, சட்ட ஆவணங்களை, விஜயின் மேலாளர் வெங்கட் என்பவரிடம் வழங்கியுள்ளோம். பரிசீலித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளனர். நல்ல முடிவை எடுப்பார்கள் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்கள் சேவகனாக இருப்பேன்;உறுதிமொழி ஏற்ற விஜய்

தொண்டர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட உறுதிமொழி: நாட்டின் விடுதலை, மக்கள் உரிமைகளுக்காக, தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நம் அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கும் பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவேன். ஜாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன்.இவ்வாறு உறுதிமொழி ஏற்றார்.

வெற்றி வாகை

போரில் மன்னர்கள் வெற்றி பெறும் போது, தங்களின் வெற்றியை பொது மக்களுக்கும், படை வீரர்களுக்கும் அறிவிக்கும் வகையில், வெற்றியின் அடையாளமாகவும், அனைவரின் பொது மலராகவும் திகழ்ந்த, வாகை மலரை மாலையாக சூடி களிப்பர். அப்போது, இயற்கையான மலர் கிடைக்காவிட்டால், பொன்னால் செய்யப்பட்ட வாகை மலர் மாலையை சூடுவது வழக்கம்.அதை குறிப்பிடும் வகையில், தன் கட்சிக் கொடியில் வாகைப்பூவை இடம்பெறச் செய்துள்ளார் விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்