உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது நட்பு ரீதியான கூட்டணி: விஜயகாந்த்: மற்ற கட்சிகளுக்கும் வரவேற்பு

இது நட்பு ரீதியான கூட்டணி: விஜயகாந்த்: மற்ற கட்சிகளுக்கும் வரவேற்பு

சென்னை :''உள்ளாட்சித் தேர்தலுக்கான என் பிரசாரத்தில், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே, தொகுதி உடன்பாடு நேற்று எட்டப்பட்டு, மா.கம்யூ., வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்கள் குறித்த பட்டியல், வெளியிடப்பட்டது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் கூட்டாக வெளியிட்டனர்.பின்னர், நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:தே.மு.தி.க., - மா.கம்யூ., இணைந்து மூன்றாவது அணி அமைந்துள்ளது. இது, நட்பு ரீதியான கூட்டணி. இந்த நட்பு மேலும் வளர்ந்து, வருங்காலங்களிலும் நீடிக்க வேண்டும். தற்போது, மூன்றாவது அணி அமைந்துள்ள சூழ்நிலையில், வேறு சில கட்சிகள் இணைவதற்கான காலம் மிக குறைவாகவே உள்ளது. இருப்பினும் வரும்பட்சத்தில் இணைத்து கொள்வோம்.திருச்சி இடைத்தேர்தலின் முடிவு, அக்., 17ம் தேதி அறிவிக்கும் நிலையில், அன்றைய தினம், உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதனால், பெரிதாக பாதிப்பு இருக்காது. இதே போல, திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலை குறித்து கூற காலம் இருப்பதால் அதுபற்றி பின்னர் அறிவிப்பேன்.கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் அ.தி.மு.க., கட்சியினர் தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டது குறித்து தற்போது நான் கருத்து கூற விரும்பவில்லை. இதே போல, தேர்தல் கமிஷனின் செயல்பாட்டையும் பார்த்த பின்னர் தான் கருத்து கூற முடியும்.பத்திரிகையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும், உடனடியாக பதில் சொல்ல இயலாது. அனைத்து கேள்விகளுக்கும் என் பிரசாரங்களில் பதில் கிடைக்கும். எங்களது பிரசாரம், தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு இருக்கும்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார். இடம், பொருள், ஏவல்; கூடவே கோபம்:பொதுவாக, தே.மு.தி.க., அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக, உள்ளே செல்லவே பலமுறை அனுமதி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.இது குறித்து, பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அதற்கு விஜயகாந்த் கூறுகையில், 'எங்களுக்கும் பல முக்கிய வேலைகள் இருக்கும் பட்சத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். மற்றபடி உங்களது பயன்பாட்டுக்காகவே, 'ஏசி' வசதி கொண்ட அறை அமைத்துள்ளேன். எங்களது சூழ்நிலையையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.இந்த கருத்தை ஏற்க மறுத்த(பாதிக்கப்பட்ட) பத்திரிகையாளர்கள் மீண்டும், மீண்டும் தங்களை கட்சி அலுவலகங்களில் பணி புரிபவர்கள் நடத்திய விதத்தை கேள்விகளாக கேட்டனர். பலர், தாங்கள் கட்சி அலுவலக நுழைவாயிலிலேயே நிறுத்தப்படுவதும், வெயிலில், பல மணி நேரம் காத்திருப்பதையும் விளக்கினர்.இதில் கோபமடைந்த விஜயகாந்த், 'சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். அப்போது நாங்கள் முக்கிய ஆலோசனையில் இருந்திருப்போம். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும்' என, கோபப்பட்டார். மா.கம்யூ., பட்டியல் : கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகளிலும், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு, 25 இடங்களும், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு, 61 இடங்களும் மா.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அனைத்து மட்டத்திலான வார்டுகள் குறித்து, மாவட்ட அளவில் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து பேசி தொகுதி பங்கீடு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.கோவில்பட்டி, பழனி, சிதம்பரம், கடலூர், ஜெயங்கொண்டம், நெல்லியாளம், துவாக்குடி, சிவகங்கை, அனகாபுத்தூர்,, குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல், திருவள்ளூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, புளியங்குடி, கம்பம், பெரியகுளம், புதுக்கோட்டை, ராமேஸ்வரம், மயிலாடுதுறை, திருமங்கலம், சாத்தூர், சத்தியமங்கலம், குடியாத்தம் ஆகிய, 25 இடங்களில், நகராட்சித் தலைவர் பதவிக்கு மா.கம்யூ.,வினர் போட்டியிடுகின்றனர்.இதே போல, ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், நாகோஜனஹள்ளி, மானாமதுரை, அருமனை, பாகோடு, கொல்லங்கோடு, இடைக்கோடு, கடையல், பாலப்பள்ளம், தெங்கம்புதூர், திற்பரப்பு, கிள்ளியூர், பளுகல், ஏழுதேசம், வில்லுக்குறி, திருவட்டார், பொன்மனை, ரீத்தாபுரம், பூதப்பாண்டி, கோத்தகிரி, ஆயக்குடி, பாளையம், அய்யலூர், சின்னாளப்பட்டி, வீரக்கல்புதூர், மேச்சேரி, மீஞ்சூர், பேரளம், குடவாசல், திருபுவனம், தாராசுரம், படைவீடு, பட்டணம், வீரவநல்லூர், நாங்குனேரி, சுந்தரபாண்டிபுரம், கோம்பை, வடுகப்பட்டி, ஓடைப்பட்டி, பூதிப்புரம், க.புதுப்பட்டி, ஊத்துக்குளி, சாமளாபுரம், திருமுருகன்பூண்டி, கறம்பக்குடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கமுதி, கிள்ளை, குறிஞ்சிப்பாடி, உளுந்தூர்பேட்டை, பழைய ஜெயங்கொண்டம், கீழ்வேளூர், தலைஞாயிறு, ஆப்பக்கூடல், செட்டியார்பட்டி, வத்திராயிருப்பு, ஒத்தக்கல் மண்டபம், செட்டிப்பாளையம், வேட்டவலம் ஆகிய, 61 இடங்களில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை