சென்னை: விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர், நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: கேப்டன் விஜயகாந்த் ஒரு தலைசிறந்த சினிமா நடிகராக, சமூக சேவராக, பிறகுக்கு முன் உதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தார். அரசியல் தலைவராக, அரசியல்வாதியாக வாழ்ந்த விஜயகாந்திற்கு சேவையை பாராட்டி பிரதமர் மோடி தலை மையிலான மத்திய அரசு பத்ம விபூஷண் உயரிய விருதை வழங்கி கவுரவித்தது. அவருடைய இந்த குரு பூஜையில் கலந்து கொண்டது மிகப்பெரிய பாக்கியமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். விஜயகாந்த் பற்றி நாம் நிறைய கேள்விபட்டு இருக்கிறோம். விஜயகாந்த் புகழ் மென் மேலும் ஓங்க வேண்டும். அவரது புகழ் பரவ வேண்டும். அவரை பற்றி வருங்கால தலைமுறையினர் அறிய வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.பெரிய இழப்பு
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தன்னுடைய பொது வாழ்க்கையிலும் சரி, தன்னுடைய அரசியல் வாழ்க்கையிலும் சரி, தன்னுடைய ரசிகர்களை பொறுத்தமட்டிலும் சரி, தனக்குகென முத்திய பதித்த தலைவர்களின் வரிசையில் கேப்டன் முதன்மையான இடத்தை பிடித்துள்ளார். அவருடைய மறைவு, அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவரது இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல , எங்களுக்கும் பெரிய இழப்பாக தான் கருதுகிறோம். நண்பர் என்ற முறையிலும், சட்டசபையில் அவருடன் பணியாற்றினேன் என்ற முறையிலும், அவர் எல்லோரிடமும் பழகும் விதம் இன்றும் நினைவில் நிற்கிறது. அவரது புகழ் உலகம் எங்கும் வாழும் மக்கள் மனதில் ஓங்கி நிற்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.நல்ல மனிதர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: நல்ல தலைவனாக நல்ல நடிகனாக இருந்தாரா என்பதைவிட நல்ல மனிதராக இருந்தாரா என்பதே முக்கியம்.. கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதராக இருந்தார். மனித மாண்பை பாதுகாத்த மாமனிதர் விஜயகாந்த்.கேப்டன் விஜயகாந்த் என்றால் மிகச்சிறந்த மனிதர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவன் மறைவிற்கு பிறகு மக்கள் மனங்களில் நிலைத்து வாழ்வதை பொறுத்துதான் மதிப்பிட முடியும். இவ்வாறு சீமான் கூறினார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நமது கேப்டன், பத்ம பூஷண், புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் 2 ம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தனி மனிதனாக வந்து, மக்கள் தலைவராக உயர்ந்த அவரது வாழ்வும், நேர்மையும், துணிச்சலும், வறியோரின் பசி தீர்த்த அவரது பண்பும், என்றும் தமிழக மக்களின் இதயங்களில் வாழும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.