லைகா நிறுவனத்துக்கு ரூ.21.29 கோடி வட்டியுடன் செலுத்த விஷாலுக்கு உத்தரவு
சென்னை:'லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய, 21.29 கோடி ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் நடிகர் விஷால் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சினிமா பைனான்சியர் அன்பு செழியனின், 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம், 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்று விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக அனைத்து படங்களின் உரிமையை தருவதாக விஷால் நிறுவனம் தெரிவித்தது.ஆனால், ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதால், கடனுக்கு செலுத்திய தொகையை திருப்பித்தர உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில், 15 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தவும், சொத்து விபரம் தாக்கல் செய்யவும், விஷால் நிறுவனத்திற்கு இடைக்கால உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்தது. அதன்படி, பணம் டிபாசிட் செய்யாததாலும், சொத்து விபரங்களை தாக்கல் செய்யாததாலும், விஷால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேரில் ஆஜராகிய விஷாலுக்கு, உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, விஷால் சொத்து விபரங்களை தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா நேற்று பிறப்பித்த தீர்ப்பில், 'லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21.29 கோடி ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் நடிகர் விஷால் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.