ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் விலைப்புள்ளி திறக்க அரசின் அனுமதிக்காக காத்திருப்பு
சென்னை: தமிழகத்தில், 3.04 கோடி, 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கான டெண்டரில், 50 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், தொழில்நுட்ப புள்ளி மதிப்பீடு பணி முடிந்துள்ளது. விலைப்புள்ளி திறக்க தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்காததால், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி தாமதமாகி வருகிறது. தமிழகத்தில் வீடு, கடைகளில், 'ஸ்டேடிக்' மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டரில், மின் பயன்பாடு துல்லியமாக பதிவாகிறது. அதை, இரு மாதங்களுக்கு ஒருமுறை ஊழியர்கள் நேரில் சென்று கணக்கிடுகின்றனர். சிலர் தாமதமாக செல்வதால், மின் பயன்பாடு அதிகரித்து, அதற்கேற்ப அதிக மின் கட்டணம் வருவதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். மென்பொருள் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என, கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை செயல்படுத்த ஆளில்லாமல், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மீட்டர், தொலைத்தொடர்பு வசதியுடன், அலுவலக, 'சர்வர்' உடன் இணைக்கப்படும். மீட்டரில், மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டிய மென்பொருள் பதிவேற்றப்படும். இதனால், கணக்கெடுக்க வேண்டிய தேதி வந்ததும் தானாகவே கணக்கு எடுத்து மின் கட்டண விபரம், நுகர் வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். இதனால், தினசரி, வாரம், மாதம் என, எப்போது வேண்டுமானாலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க முடியும். தமிழகம் முழுதும் ஆறு தொகுப்புகளாக, 3.04 கோடி மின் இணைப்பு களில், ' ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தி, அதை, 93 மாதங்களுக்கு பராமரிக்கும் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, இந்தாண்டு மார்ச்சில் மின் வாரியம், 'டெண்டர்' கோரியது. திட்டச்செலவு, 20,000 கோடி ரூபாய். டெண்டரில் பங்கேற்க, நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் ஆக., 5ல் முடிவடைந்தது. ஆறு தொகுப்புகளுக்கும் சேர்த்து, 50 நிறுவனங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு நிறுவனமும், தொழில்நுட்ப புள்ளி, விலைப்புள்ளி என, இரு ஆவணங்களை சமர்ப்பித்தன. தொழில்நுட்ப ஆவணங்களை சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் முடித்துள்ளனர். தாமதம் விலைப்புள்ளியை திறக்க, அரசின் அனுமதியை மின் வாரியம் கேட்டுள்ளது. இன்னும் அனுமதி கிடைக்காததால், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து டெண்டர்களிலும், தொழில்நுட்ப புள்ளியில் தேர்வாகும் நிறுவனங்களின் விலைப்புள்ளி மட்டும் திறக்கப்படும். அதில், குறைந்த விலைப்புள்ளி வழங்கிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படும். 'ஸ்மார்ட் மீட்டர்' டெண்டரில், நிறுவனங்கள் வழங்கிய தொழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்டு, மதிப்பீடு முடிந்த நிலையில், விலைப்புள்ளி திறக்க அரசிடம் இருந்து அனுமதி வர வேண்டியுள்ளது. அனுமதி கிடைத்தால் தான், விலைப்புள்ளி திறக்கப் பட்டு, தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.