சென்னை:“சென்னை, கோவை, சேலம் நகரங்களில், குடிநீர் விநியோகம் தனியார் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது,” என, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., சார்பில், 'சென்னை இன்பிரா நெக்ஸ்ட் - 2025' என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கு நடந்தது. டெண்டர்
இதில், அரசு - தனியார் கூட்டு செயல்பாட்டில், புதிய வழிமுறைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, பூஜா குல்கர்னி பேசியதாவது: தமிழகத்தை, 2030க் குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் உடைய மாநிலமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, உள்கட்டமைப்பு துறையில், 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவை. தனியார் பங்கேற்பு வாயிலாக மட்டுமே, இந்த அளவுக்கு முதலீட்டை செய்ய முடியும். தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை, சாலை மேம்பாடு போன்ற பணிகளில், தனியார் பங்கேற்பு வெற்றிகரமாக அமைந்து உள்ளது. அந்த வகையில், கோவையில், 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிக்கு, தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விரைவில் பணியை துவக்க உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சேலத்தில் குடிநீர் விநியோகத்துக்கு, தனியார் நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் கோரும் பணிகள் முடிந்து உள்ளன. சென்னை, திருவான்மியூர் பகுதியில், குடிநீர் விநியோகம் செய்யும் பணி தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக, 40,000 இணைப்புகள் தனியார் கட்டுப்பாட்டுக்கு செல்லும். இவர்களுக்கு, 24 மணி நேரமும், தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும். தமிழகத்தில் முதன்முறையாக, சோலார், காற்றாலை வாயிலாக பெறப்படும் பசுமை மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் விநியோகிக்க, தனியார் பங்கேற்பு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. மணிக்கு, 1,000 மெகாவாட் பசுமை மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' வசதி, தனியார் வாயிலாக அமைக்கப் பட உள்ளது. நெரிசல்
மின்சார வாரியத்தின் துணைமின் நிலையங்களில், இதற்கான நிலத்தை அரசு வழங்கும். அதில், தேவையான கட்டமைப்புகளை, தனியார் நிறுவனங்கள், 800 கோடி ரூபாயில், 18 மாதங்களில் ஏற்படுத்தும். முதலில், 1,000 மெகா வாட் பேட்டரி ஸ்டோரேஜ் வசதிக்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மேலும், 1,000 மெகா வாட் பேட்டரி ஸ்டோரேஜ் வசதி ஏற்படுத்த, விரைவில் டெண்டர்கள் கோரப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் முகமது அலி பேசுகையில், “சென்னை உள்ளிட்ட பிரதான நகரங்களில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, 40 சிறு நகரங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.