உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகாவில் தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றோம்: மாவோயிஸ்ட் வாக்குமூலம்

கர்நாடகாவில் தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றோம்: மாவோயிஸ்ட் வாக்குமூலம்

சென்னை:'கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் தாக்குதல் நடத்த, மஹாராஷ்டிரா மாநில கூட்டாளிகளுடன் இணைந்து, கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்றோம்' என, தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ரமேஷ், 43; கார்த்திக்,41 ஆகியோர், என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.கடந்த, 2016ல், கேரள மாநிலம் நிலாம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்ட்கள் ஆயுத பயிற்சி பெற்றனர். பின் இவர்கள், காட்டுப்பகுதியில் இருந்த வனத்துறை அலுவலகத்தை சூறையாடினர். அவர்கள் மீது, கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து, 2017ல் இருந்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணையில், ஆயுத பயிற்சி பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 15க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். என்.ஐ.ஏ., அதிகாரிகளால் தேடப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்களான, தேனி மாவட்டம் பண்ணைபுரம் பெரிய கார்த்திக், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகாவை சேர்ந்த ரமேஷ் ஆகியோர், கடந்த ஜனவரியில் கர்நாடக போலீசாரிடம் சரணடைந்தனர்.அவர்களை மூன்று நாட்களாக, கேரள மாநில என்.ஐ.ஏ., அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களிடம் கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலம்:நிலாம்பூர் வனப்பகுதியில், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் ஆயுத பயிற்சி பெற்றோம். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும், பழங்குடியின மக்களை மிரட்டி, உடைகள், உணவுப் பொருட்களை பெற்றுச் சென்றோம்.

சதி திட்டம்

என்னுடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ், கோவை மாவட்டத்தை சேர்ந்த டேனிஷ், சந்தோஷ்குமார், தினேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த திருவேங்கடம், வேலுாரை சேர்ந்த ராகவேந்திரன், ராணிப்பேட்டை ரமேஷ், விருதுநகர் அய்யப்பன், திருநெல்வேலி அனேஷ்பாபு ஆகியோரும் ஆயுதப் பயிற்சி பெற்றனர்.கர்நாடகா, கேரள மாநில எல்லையில், மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்தோம். பெங்களூரில் வெளிநாட்டவர் நடத்தி வந்த ஹோட்டலை தகர்ப்பது, அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவது என, பல்வேறு திட்டங்கள் எங்களிடம் இருந்தன. இதற்கான சதி திட்டத்துடன் ஆயுத பயிற்சி பெற்றோம்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ