உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக வழக்கு; ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் தீர்மானம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக வழக்கு; ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: 'மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும் செயல் என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்' என, சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவேற்பு

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நாளை முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vi8o1h7i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன.இச்சூழலில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ், ம.தி.மு.க., - வி.சி., - தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.நீ.ம., முஸ்லிம் லீக், கொ.ம.தே.க., த.வா.க., ம.ம.க., - எஸ்.டி.பி.ஐ., உட்பட பல கட்சிகள் பங்கேற்றன.

வழக்கு நிலுவை

அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சி களுக்கு, தி.மு.க., சார்பில் அழைப்பு அனுப்பப்படவில்லை. ஆனால், அழைப்பு விடுத்தும், த.வெ.க., நாம் தமிழர், அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட 20 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:* பீஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில், இறுதி தீர்ப்பு வெளிவராத காலகட்டத்தில், தமிழகத்தில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு கொண்டு வந்துள்ளது ஏற்க இயலாதது.* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன் உள்ள காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை, பொங்கல் பண்டிகை போன்றவை இருக்கின்றன. இதனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் விடுபடும் வாக்காளர்களோ, சேர விரும்பும் வாக்காளர்களோ மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி, தங்களது ஓட்டுரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.* உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல். எனவே, திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் உடனே கைவிட வேண்டும்.* உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்கு பின், எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில், திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இந்த கருத்துகளை ஏற்கவில்லை என்றால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்கள் பேசியது என்ன?

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக குடியுரிமை சான்றிதழ் கேட்டால், யாராலும் கொடுக்க முடியாது. இந்தப் பணியை ஒரு மாதத்தில் முடிக்கும்படி கூறியுள்ளனர்; அதற்கு சாத்தியமில்லை. இது, பருவ மழை காலம்; அலுவலர்களால் இதை செய்ய முடியாது. தேர்தல் ஆணையம் செய்வது மோசடியான நடவடிக்கை. குறுக்கு வழியில் வெற்றி பெற, பா.ஜ., முயற்சி செய்கிறது.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த ஆறரை லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவர்களின் பெயர்கள், தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும், சென்னையில் மட்டும் பீஹாரைச் சேர்ந்த மூன்றரை லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 75 லட்சம் வாக்காளர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வி.சி., தலைவர் திருமாவளவன்: ஓட்டுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அல்ல; குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரத்தையே அவர்கள் கேட்கின்றனர். மறைமுகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, தேசிய குடியுரிமை பதிவேடு எனும் குடியுரிமை பதிவேட்டை உருவாக்கவே, இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியை செய்கின்றனர்.ம.நீ.ம., தலைவர் கமல்: மக்களாட்சியின் அடித்தளமே ஓட்டுரிமை தான். தகுதியுள்ள ஒருவரின் பெயர் கூட, வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஏன் இவ்வளவு அவசரமாக செய்யப்படுகிறது? இந்த அவசரத்தால், 65 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் ஓட்டுரிமையை இழந்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம்: இந்த திருத்தம் எப்படி மக்களின் உரிமைகளை பறிக்கிறது என்பது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: தமிழக சட்டசபை தேர்தல் கூடி வரும் நிலையில், அவசர கதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தேவையில்லாத ஒன்று. சட்டசபை தேர்தலுக்கு பின், நடுநிலையோடு நடத்தலாம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

தேர்தலுக்கு பின் நடத்தலாமே!

இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்களின் ஓட்டுரிமையை பறித்து, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் நோக்கோடு, அவசர கதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது, அனைத்து கட்சிகளின் கடமை. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, குழப்பம், சந்தேகம் இல்லாமல், போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின் நடத்த வேண்டும் என்ற நம் கோரிக்கையை, தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்ச நீதிமன்றத்தை நாட, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று, தங்களுடைய உணர்வை பதிவு செய்த கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி. இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும், தங்களுடைய கட்சிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து விவாதித்து, ஜனநாயகத்தை காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

20 கட்சிகள் புறக்கணிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்கும்படி, தி.மு.க., கூட்டணியில் இல்லாத கட்சி களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. தி.மு.க., தலைமை நிலைய செயலர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் அமைப்பு துணை செயலர் ஆஸ்டின் ஆகியோர், ஒவ்வொரு கட்சித் தலைவர்களின் அலுவலகங் களுக்கும் சென்று, அழைப்பு கடிதம் கொடுத்தனர். தே.மு.தி.க., நாம் தமிழர், த.மா.கா., - த.வெ.க., - பா.ம.க., ராமதாஸ் அணி, அ.ம.மு.க., என, 60க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை த.வெ.க., எதிர்த்தது. அதனால், அக்கட்சிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., அன்புமணி அணி ஆகிய கட்சிகள் ஆதரித்ததால், அந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அ.ம.மு.க., எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. அக்கட்சிக்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை. அதேபோல, த.மா.கா.,வுக்கு அழைப்பு விடுத்தும், அக்கட்சி பங்கேற்கவில்லை. அழைப்பு விடுக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட கட்சிகளில், 20 கட்சிகள் புறக்கணித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

Padmasridharan
நவ 05, 2025 17:09

NOTA வோட்டு வேஸ்ட்டா போவுமே பேட்டா.. இப்படியெல்லாம் பண்ணாலும்


Ramalingam Shanmugam
நவ 04, 2025 13:22

நீ எங்க இங்கே


vijayasekar perumal Naidu
நவ 04, 2025 11:31

கெட்ட காலம்


Sun
நவ 03, 2025 21:35

அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க வை ஏன் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைக்கவில்லை? நீங்கள் எதிர்ப்பதற்கு ஒரு காரணம் இருக்கிற மாதிரி அவர்களிடம் ஆதரிப்பதற்கும் ஒரு காரணம் இருக்கும் அல்லவா? ஒரு நல்ல அரசு, நல்ல முதலமைச்சர் ஆதரிப்பவர் எதிர்ப்பவர் அனைவர் கருத்துக்களையும் கேட்டு அல்லவா ஒரு முடிவுக்கு வர வேண்டும்?


பேசும் தமிழன்
நவ 03, 2025 18:38

நாட்டில் கள்ளத்தனமாக ஊடுருவியுள்ள..... யாரெல்லாம் இந்த நாட்டின் பிரஜை என்று பொய் சொல்லி... போலியாக வாக்காளர் அடையாள அட்டை பெற்று இருப்பவர்களின் பெயர்கள் தானே நீக்கப்படும்.... நீங்கள் ஏதோ புதிதாக கதை விடுகிறீர்களே.... பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.


Thulasi K
நவ 03, 2025 18:36

எல்லாம் சரி கி வீரமணி யார் அவர் என்ன கட்சி தலைவரா


அருண் பிரகாஷ் மதுரை
நவ 03, 2025 17:59

அதென்ன அனைத்துக் கட்சிகளும் இணைந்து வழக்குப் போடுவது..தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து திமுக தனியாக வழக்கு தொடுங்கள் பார்க்கலாம்.ஆட்சியே கலைந்து விடும் என்ற பயம் இருக்கிறதா..இங்கே இருந்து மமதைக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகும்போதே தெரியும்.ஏதோ உள் குத்து இருக்கிறது என்று.. இங்கும் அங்கும் ஒரே வெளிநாட்டு நபர்களுக்கு வேறு வேறு பெயரில் ஓட்டு இருக்க வாய்ப்புள்ளது.தேச துரோகிகளை துவம்சம் செய்யுங்கள்..பொது மக்கள் மட்டுமல்ல கட்சிக்காரர்களே மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள்.. ஆனால் வெற்றி பெறுவோம் என்று ஜம்பம் விடும்போதே சந்தேகம் இருந்தது.. இப்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது..


kumaran
நவ 03, 2025 17:56

அரசியல் கட்சி தலைவர்களிடம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா நாம் பொய்தான் பேசுகிறோம் என்று தெரிந்தும் கொஞ்சம் கூட கூச்சமாக இல்லாமல் பேசுகிறார்கள் இதில் கொடுமை அவர்களை ஆதரிப்பவர்கள் கூட அப்படியே அநீதியாக பேசியபின் நீதியை யாரிடம் கேட்பது தர்மத்தை வளருங்கள் அதர்மத்தை வளர்க்காதீர்கள் அது வளர்த்தவரையே முழுங்கி விடும் ஜாக்கிரதை


theruvasagan
நவ 03, 2025 17:23

வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் நடக்க வேண்டிய ஒன்று. அது மெதுவாக நடக்கட்டும். ஒரு வருடம் ஆனாலும் பரவாயில்லை. அதற்குள் இந்த சட்டசபை ஆயுட்காலம் முடிவுக்கு வந்தால் ஜனாதிபதி ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் பூர்தியான பிறகு தேர்தலை நடத்தலாம். அப்படி செய்ததால்தான் இவங்க அடங்குவாங்க.


Thulasi K
நவ 03, 2025 18:38

சரியானது


theruvasagan
நவ 03, 2025 17:12

அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் செயல்படும் ஒரு அமைப்பின் நடவடிக்கைகள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை வைத்து அதன் செயல்பாட்டை முடக்க நினைப்பது அரசியல் சட்டத்தை அவமதிப்பதற்கு சமம். இதற்காக இவர்களுக்கு பெரிய அபராதமும் தண்டைனையும் தரவேண்டும். கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை