உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம்: அ.தி.மு.க., உறுதிமொழி

ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம்: அ.தி.மு.க., உறுதிமொழி

சென்னை : 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம்' என, ஜெயலலிதா நினைவிடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், அக்கட்சியினர் நேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வினர் கருப்பு சட்டை அணிந்து வந்து, மலர் வளையம் வைத்தும், மலர்களை துாவியும் அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், வைகைச்செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன், உதயகுமார், செல்லுார் ராஜு, வளர்மதி, கோகுல இந்திரா, நடிகை கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர், பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வினர் எடுத்துக்கொண்ட உறுதிமொழி:* தீயசக்தியை விரட்டி யடிக்க, குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் உழைப்போம். பொய்யான வாக்குறுதிகள் தந்து, மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதல்வர் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்* தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர், அதிகாரம் செலுத்தும் மருமகன் என, போலி திராவிட மாடலின் பொய்முகத்தை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்* குடிநீர் கட்டணம், சொத்து வரி, பால் விலை, மின்கட்டணம், பஸ் கட்டணங்களை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தந்திர மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்* எங்கும் கஞ்சா போதையால் தமிழகமே தத்தளித்து வருகிறது. இதற்கு காரணமான தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம்* வரும் சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம்.இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

புகழஞ்சலி

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜெயலலிதா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம்.'தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அவரது ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடிய, அமைதி, வளம், வளர்ச்சி பொருந்திய தமிழகத்தை கட்டமைப்பதே, ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ramesh
டிச 06, 2024 13:16

முதலில் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் காப்பாற்ற முடியுமா பாருங்கள் .அதன் பிறகு ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது குறித்து யோசியுங்கள் எடப்பாடி அவர்களே


Sampath Kumar
டிச 06, 2024 11:16

சூப்பர்


Kalyanaraman
டிச 06, 2024 08:11

பழனிச்சாமி அதிமுகவை காலி பண்ணாமல் ஓய மாட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை