உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வழக்கு போட்ட பிறகு தான் நிறுவன பெயரை சொல்வோம்; கலப்பட மசாலா விவகாரத்தில் அதிகாரிகள் அடம்

 வழக்கு போட்ட பிறகு தான் நிறுவன பெயரை சொல்வோம்; கலப்பட மசாலா விவகாரத்தில் அதிகாரிகள் அடம்

கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், 58 நிறுவனங்களின், 91 மசாலா துாள் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டதில், அதில் ஒன்பது தரமற்றவை என தெரியவந்துள்ளது. வழக்கு போடும் போது, அந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவதாக அதிகாரிகள் கூறியதால், அதுவரை கலப்பட மசாலாக்களை மக்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பரிசோதனை கடந்த ஆண்டு நவ., மாதம் மசாலா துாள்களில் தரமற்ற பொருட்கள் கலக்கப்படுவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், அனைத்து பிராண்டுகளின் மசாலா துாள், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மாதிரிக்கு எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. மேலும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்தரவின்படி, முட்டை, வறுத்த வெள்ளை சுண்டல் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வுக்குப்பின், இவற்றின் முடிவுகள் வந்துள்ளன. மசாலா துாளில் அதிர்ச்சியூட்டும் வகையில் செயற்கை நிறமிகள் கலந்தது தெரியவந்துள்ளது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: நவ., மாதம் மட்டும், 58 நிறுவனங்களின், 91 வகையான மசாலா துாள் மாதிரிகள் பல்வேறு இடங்களில் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினோம். அதில், ஒன்பது மசாலாக்களில் செயற்கை நிறமிகள் இருப்பதும், தரமற்றவை எனவும் முடிவுகள் வந்துள்ளன. வழக்கு பதிவு தரமற்ற மசாலாக்களை தயார் செய்த நிறுவனங்களுக்கு, இப்பரிசோதனை முடிவுகளின் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அடுத்தகட்டமாக வழக்கு பதிவு செய்யப்படும். அப்போது அந்த நிறுவனங்களின் பெயர்களை வெளிப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர் விபரங்களை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெளியிடாததால், அவர்கள் வழக்கு போடும் வரை கலப்பட மசாலா துாள்களையே நுகர்வோர் பயன் படுத்த வேண்டிய நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை