தென்காசி: 'ஜனநாயகத்தின் அடித்தளமான ஓட்டுரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி வந்தார். திருநெல்வேலியை அடுத்த முக்கூடல் அருகே அரியநாயகிபுரத்தில் வசிக்கும், அவரது மருமகன் சபரீசனின் பெற்றோர் இல்லத்தில் தங்கினார். பின்னர், நேற்று காலை அங்கிருந்து, தென்காசி சென்று, அரசு விழாவில் பங்கேற்றார். விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., ஆட்சி மீது நாள்தோறும் ஏதாவது ஒரு அவதுாறு பரப்பப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, விரக்தியின் உச்சத்தில் பொய் பேசுகிறார். பொய்யையும், துரோகத்தையும் தவிர அவரிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. விவசாயிகள் பாடுபட்டு உருவாக்கிய ஒரு நெல் மணி கூட வீணாக கூடாது என அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டு களில் 1 கோடியே 70 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 42 லட்சத்து 61,000 டன் நெல் கொள்முதல் செய்யப் படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், ஆண்டுக்கு 27 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தி.மு.க., அரசு, மூன்று முறை இயற்கை பேரிடர்களை சந்தித்துவிட்டது. வெள்ள பாதிப்புக்காக 37,000 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டும் கொடுக்கவில்லை. என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. இப்போது, தேர்தல் கமிஷன் வாயிலாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பெயரில், ஓட்டுரிமையை பறிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஏற்கனவே, பீஹாரில் என்ன நடந்தது என்பதை பார்த்தோம். பா.ஜ., தோல்வி உறுதியானால் வாக்காளர்களையே நீக்க துணிந்தனர். அதே பார்முலாவை தமிழகத்திலும் கொண்டு வரப் பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் அடித்தளம் ஓட்டுரிமைதான்; அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஓட்டு பறிப்பு, ஓட்டு திருட்டு போன்ற பா.ஜ., திட்டத்தை முறியடிக்க, நவ., 2ல் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மக்களாட்சியை காக்கும் இந்த முன்னெடுப்பில், அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வீரர்களை பாராட்டிய முதல்வர் சென்னையில் சமீபத்தில், 'கல்வியில் சிறந்த தமிழகம்' விழாவில் பேசிய பிரேமா என்ற மாணவி, 'தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தில், தங்கள் வீடு ஒழுகும் நிலையில் இருப்பதாக' பேசினார். அவருக்கு அரசு இல்லம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். அந்த வீடு கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின், நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாணவி பிரேமாவின் தந்தை ராமசாமி, தாய் முத்துலட்சுமி ஆகியோரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தென்காசி அருகே ஆய்க்குடியில், அமர் சேவா சங்கம் சென்ற முதல்வர் ஸ்டாலின், 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். எகிப்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக அளவிலான 'பவர் லிப்டிங்' போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற, அமர் சேவா சங்க மாற்றுத்திறனாளி வீரர்களை பாராட்டினார்.