டாக்டர்கள் போராட்டம் வாபஸ் : மேற்கு வங்கத்தில் திருப்பம்
கோல்கட்டா,மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரித்தல், மாநில சுகாதாரச் செயலரை பணி நீக்கம் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பயிற்சி டாக்டர்கள் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த 14 பேர், கோல்கட்டாவில் கடந்த 5ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பயிற்சி டாக்டர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று பேச்சு நடத்தினர். கோல்கட்டாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் இரண்டு மணி நேரம் நடந்த பேச்சு, சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது, கோரிக்கைகளுக்கு பணிந்து மாநில சுகாதாரச் செயலரை நீக்க முடியாது என முதல்வர் மம்தா திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும், சுகாதாரச் செயலரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை பயிற்சி டாக்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை ஏற்று, பயிற்சி டாக்டர்கள் தங்களின் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று இரவு அறிவித்தனர்.