உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறு மாவட்டங்களில் 874 மனைகள் வீட்டுவசதி வாரிய திட்டம் என்னாச்சு?

ஆறு மாவட்டங்களில் 874 மனைகள் வீட்டுவசதி வாரிய திட்டம் என்னாச்சு?

சென்னை: 'ஆறு மாவட்டங்களில், ஏழு இடங்களில், 874 மனைகள் உருவாக்கப் படும்' என, வீட்டுவசதி வாரியம் அறிவித்த திட்டம் இன்னும் முழுமையாகசெயல்படுத்தப்பட வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வீட்டுவசதி வாரியத்தில் மனைகள் வாங்க, பொது மக்கள் மத்தியில் எப்போதும் போட்டி இருக்கும். வீட்டுவசதி வாரியத்தால் அறிவிக்கப்படும் மனை என்றால், அதில் வில்லங்கம் இருக்காது, முறையாக அங்கீகாரம் இருக்கும் என, மக்கள் நம்புகின்றனர்.

சுயநிதி முறை

மக்களின் இத்தகைய எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், வீட்டு வசதி வாரியம் பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் மனைப்பிரிவுதிட்டங்களை செயல்படுத்தி வந்தது.தனியார் நிறுவனங்கள் போன்று இல்லாமல், அகலமான சாலைகள், பூங்கா, பள்ளிக்கூடம், வணிக பகுதி, சமுதாய கூடம் போன்ற வசதிகளுடன், இத்திட்டங்கள் அமையும். கடந்த சில ஆண்டுகளாக, சுயநிதி முறையில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட துவங்கிய நிலையில், மனைப்பிரிவு திட்டங்களில், வாரியம் ஆர்வம் காட்டுவது குறைந்தது. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மட்டும் மனைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், 2021ல் பல்வேறு மாவட்டங்களில், புதிய மனைப்பிரிவு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, வீட்டுவசதிவாரியம் அறிவித்தது. ஆனால், இத்திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை, திருவள்ளூர், வேலுார், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை ஆகிய, ஆறு மாவட்டங்களில் ஏழு இடங்களில், 874 மனைகள் அடங்கிய புதிய திட்டங்கள், 2021ல் அறிவிக்கப்பட்டன. இதற்கான நிலம் தேர்வு செய்ய, அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் மற்றும் பழைய மனைப் பிரிவு திட்டங்களில் விற்காமல் உள்ள வீடு, மனைகளை விற்க கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கான பணிகளில், கோட்ட அளவிலான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நடவடிக்கை

இதனால், புதிய மனைப்பிரிவு திட்டங்களுக்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு, விற்பனைக்கு தயாராக உள்ளன.சில இடங்களில் நில பிரச்னை காரணமாக, திட்டங்கள் உருவாக்கம் தாமதமாகி உள்ளது. இந்த பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை