உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னென்ன பயிர்கள் சாகுபடி? மீண்டும் கணக்கெடுக்க முடிவு

என்னென்ன பயிர்கள் சாகுபடி? மீண்டும் கணக்கெடுக்க முடிவு

சென்னை: எங்கெங்கு என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன என்பதை துல்லியமாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், விவசாயிகளின் நிலம், பயிர் சாகுபடி உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க, 'உற்பத்தியாளர் வலைதளப் பதிவு வழி, வேளாண் இடுபொருள் முறை' என்ற பெயரில், கடந்த ஆண்டு நாடு முழுதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு, 'கிரெய்ன்ஸ்' திட்டம் என பெயரிடப்பட்டு, தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, தகவல்கள் திரட்டப்பட்டன.வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், வருவாய், கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு, ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட 13 துறைகள் இணைந்து, இப்பணியை மேற்கொண்டன. தமிழகம் முழுதும், 79 லட்சம் விவசாயிகளின் ஆதார் அட்டை, நிலப் பட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால், இக்கணக்கெடுப்பு முழுமை பெறவில்லை. எனவே, மீண்டும் துல்லியமாக கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனி மொபைல் போன் செயலி உருவாக்கும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 1.19 கோடி ஏக்கரில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இருபோக சாகுபடி பரப்பு 35.1 லட்சம் ஏக்கராக அதிகரித்து உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில், இரு மடங்காக்க திட்டமிடப்பட்டு உள்ளது. உணவு தானியங்கள், தென்னை, சூரியகாந்தி, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி பரப்பை, தேசிய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. இது போன்ற இலக்குகளை அடைய, துல்லியமான கணக்கெடுப்பு நடத்தி, புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வருவாய் துறையினர் இணைந்து, இப்பணிகளில் ஈடுபட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ