ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் என்னாச்சு! தி.மு.க.,கப்சிப்; விவசாயிகள் அப்செட்
உடுமலை: பி.ஏ.பி., திட்டத்தில், நிலுவையிலுள்ள ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டங்களை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், விவசாய சங்கத்தினர் ஒருங்கிணைந்து போராட திட்டமிட்டுள்ளனர்.தமிழக-கேரள அரசுகளுக்கு இடையே நீர்பங்கீடு ஒப்பந்தம், 1958ல் மேற்கொள்ளப்பட்டு, பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், 12 அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி, அரபிக்கடல் நோக்கி செல்லும் ஆறுகளை தடுத்து, நீர் மின் உற்பத்தி செய்து, பல லட்சம் ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.தற்போது, ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் தவிர, பிற அணைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன. இந்த இரு அணைகள் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பயன்பெறும், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.சுழற்சி முறையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே விளைநிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்ட வேண்டும் என, இரு மாவட்ட விவசாயிகளும், நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த குழுவும் செயல்பாடின்றி இருக்கிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், இத்திட்டம் இடம்பெறவில்லை. இதனால், இரு மாவட்ட விவசாயிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் இரு மாவட்ட கிராமங்களிலும், திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரவும் தயாராகி வருகின்றனர்.இந்திய விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், ஒவ்வொரு சீசனிலும், 10 டி.எம்.சி., தண்ணீர் வரை கிடைக்கும். தற்போது மழைக்காலத்தில், இந்த நீர் உபரியாக அரபிக்கடலை நோக்கி செல்கிறது. இதனால், கேரளாவிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களின் குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்கும், நிலுவையில் உள்ள இரு அணைகளை கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இது குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராடவும் தயாராகி வருகிறோம். இவ்வாறு, கூறினர்.